2016-02-29 16:10:00

இரக்கத்தின் யூபிலி ஆண்டு, அகவாழ்வைப் புதுப்பிக்க வாய்ப்பு


பிப்.29,2016. அகவாழ்வைத் தூய்மைப்படுத்துவது முதல், வாழ்வைப் புதுப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இரக்கத்தின் யூபிலி ஆண்டு அமைந்துள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுவரும் இத்தாலிய இராணுவ காவல்துறையினர் 150 பேரை இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கு வருகை தரும் வயதானவர்கள் முதல் பல்வேறு வயதுடைய திருப்பயணிகளுக்கு, இத்துறையினர் பொறுமையோடு ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

சின்னஞ்சிறிய சகோதரருள் ஒருவருக்கு இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் போதனை, இக்காவல்துறையினரின் பொதுப்பணிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்றும், நற்செய்திக்கு நாம் பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிக்க, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஆன்மீகக் கூறு நம்மை உந்தித் தள்ளுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் அருள், உங்களின் பணியினை மிகுந்த அர்ப்பணத்தோடும், கவனத்தோடும், மனத்தாராளத்தோடும் ஆற்றுவதற்கு உதவட்டும் என்று காவல்துறையினரிடம் கூறிய திருத்தந்தை, இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆசிரை வழங்கியதோடு, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

“Carabinieri”என்று அழைக்கப்படும் இத்தாலிய இராணுவ காவல்துறையினர், உரோம் நகரில் வத்திக்கான் பகுதியில் பணியாற்றுகின்றனர். இவர்கள் இத்தாலியின் இராணுவ மற்றும் குடிமக்களுக்குப் பணியாற்றுகின்றனர். இத்தாலியின் இரு முக்கிய தேசிய காவல்துறைப் பிரிவில், “Carabinieri” அமைப்பு ஒன்று. மற்றது “Polizia di Stato” என்ற அமைப்பாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.