2016-02-27 15:57:00

மனித சமுதாயம் சுமக்கும் சிலுவைகளை மையப்படுத்தி சிலுவைப்பாதை


பிப்.27,2016. இன்றைய உலகம் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் 21ம் நூற்றாண்டின் மறைசாட்சிகள் குறித்த சிந்தனைகள், இவ்வாண்டு புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்திமுயற்சியில் வழங்கப்படும் என்று கர்தினால் Gualtiero Bassetti அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் இப்பக்திமுயற்சிக்கு, தான் எழுதும் தியானச் சிந்தனைகள் பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Bassetti அவர்கள் இவ்வாறு கூறினார்.

சிலுவைப்பாதையின் 14 நிலைகளும், இன்றைய மனித சமுதாயம் சுமக்கும் சிலுவைகளை மையப்படுத்தியிருக்கும் என்றுரைத்த கர்தினால் Bassetti அவர்கள், இன்றைய உலகில் சிலுவைகளுக்குக் குறைவில்லை, மக்கள் அவற்றை, கட்டாயமாகச் சுமக்கின்றனர் என்று கூறினார்.

வருகிற மார்ச் 25ம் தேதி புனித வெள்ளியன்று, உரோம் கொலோசேயும் என்ற இடத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை பக்திமுயற்சிக்குத் தியானச் சிந்தனைகளை எழுதுவதற்கு, இத்தாலியின் பெருஜியா நகரின் 73 வயது நிரம்பிய கர்தினால் Bassetti அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெருஜியா நகரின் 160 ஆண்டு வரலாற்றில், அந்நகர் கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக கர்தினாலைப் பெற்றுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டில் பேராயர் Gualtiero Bassetti அவர்களைக் கர்தினாலாக உயர்த்தினார். பெருஜியாவில், கடைசியாக கர்தினாலாக இருந்தவர் கர்தினால் Gioacchino Pecci. இவர், 1878ம் ஆண்டில், திருத்தந்தையாகத் தலைமைப்பணியேற்ற திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.