2016-02-27 13:46:00

தவக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


பல நாடுகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் எழுதி அனுப்பியக் கேள்விகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பதில்கள், ஒரு நூலாக வெளிவந்துள்ளன. 6 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், பல்வேறு நாடுகளிலிருந்து திருத்தந்தைக்கு அனுப்பியக் கேள்விகளில், 30 கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றிற்கு திருத்தந்தை பதில் அளித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த எய்டென் (Aiden) என்ற சிறுவன் கேட்ட கேள்வியும், அதற்கு, திருத்தந்தை கூறிய பதிலும் நமது ஞாயிறு சிந்தனையை இன்று துவக்கி வைக்கின்றன.

"இறந்துபோன என் தாத்தா கத்தோலிக்கர் அல்ல. அவர் விண்ணகத்திற்குப் போவாரா?" என்பது, எய்டென் கேட்டிருந்த கேள்வி. இக்கேள்விக்கு, திருத்தந்தை பதில் சொன்னபோது, புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொள்கிறார்.

ஒருநாள் புனித வியான்னியைத் தேடி வந்த ஒரு பெண்மணி, தன் கணவர் பாலத்தின் மேலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினார். அவர் செய்த பாவத்தால், கட்டாயம் நரகத்திற்குத்தான் சென்றிருப்பார் என்ற தீர்மானத்தில், அப்பெண் கதறி அழுதார். அப்போது, புனித வியான்னி, அப்பெண்ணிடம், "மகளே, அந்தப் பாலத்திற்கும், ஓடுகின்ற ஆற்றுக்கும் இடையே, இறைவனின் இரக்கம் நிறைந்திருக்கிறது. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறி, அப்பெண்ணை அமைதிப்படுத்தி அனுப்பினார்.

இந்நிகழ்வை தன் பதிலாகப் பகிர்ந்துகொண்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவன் எய்டெனின் தாத்தாவை, இறைவனின் இரக்கம் விண்ணகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கக்கூடும் என்பதை, சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இரக்கத்தின் ஊற்றாகத் திகழும் இறைவனை, இன்றைய வாசங்களில் சந்திக்கிறோம். "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; ...அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்" (விடுதலைப் பயணம் 3: 7-8) என்று கூறும் இறைவனை, எரியும் புதரில் மோசே சந்தித்தார். அதேவண்ணம், இன்றைய உலகில் கொழுந்துவிட்டெரியும் பல பிரச்சனைகளின் நடுவிலிருந்து எழும் அழுகுரல்களைக் கேட்டு, இறைவன் இறங்கி வந்தவண்ணம் இருக்கிறார் என்பதை, இரக்கத்தின் ஆண்டு முழுவதும் நம்ப முயல்வோம்.

இறைவனின் பொறுமையை வலியுறுத்தும் ‘அத்திமரம் உவமை’யை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். 'இரக்கத்தின் நற்செய்தி' என்று சொல்லப்படும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் இந்த உவமை, இரக்கத்தின் உயிர்நாடியாக விளங்கும் பொறுமையைப் பற்றி சிந்திக்க அழைக்கிறது.

'பொறுமை' என்ற வார்த்தை, நம் சந்ததியினர் மறந்துபோன ஒரு வார்த்தையோ என்று எண்ணத் தோன்றுகிறது. நொடிப்பொழுதில் நம் தேவைகளை நிறைவேற்றும் இயந்திரங்களால் நாம் சூழப்பட்டுள்ளோம். விசையொன்றைத் தட்டியதும், விடைகள் வெளியேறும் இன்றைய உலகில், மனிதர்களையும் இயந்திரங்களைப்போல் பாவித்து, விரைவான மாற்றங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

கருவில் குழந்தை உருவானதும், அது விரைவில் பிறந்து, வளர்ந்து, படித்து, பட்டம் பெற்று, வேலையில் அமர்ந்து... என்று அவசர அவசரமாய் கனவுகள் காண்கிறோம். நம் அவசரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் குழந்தைகள் தத்தளிக்கின்றன; தடுமாறி விழுந்து, நொறுங்கிப் போகின்றன.

தளிராக இருக்கும்போதே, அச்செடியில் முதிர்ந்த பழங்களைத் தேடிச்செல்வது அநியாயம். நம் அவசர மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுவதற்கும், உண்மையான வளர்ச்சி வேண்டுமெனில் பொறுமை தேவை என்பதை வலியுறுத்துவதற்கும், இயேசு கூறிய 'அத்திமரம் உவமை' உதவியாக இருக்கிறது.

அத்தி மரங்கள், சீக்கிரம் பூத்து, காய்த்து, கனிதரும் வகையைச் சேர்ந்தவை. அவற்றிற்கு அதிக உரம், நீர் தேவையில்லை. அப்படிப்பட்ட மரம், மூன்றாண்டுகள் ஆகியும், பலன் தரவில்லை. தோட்டத்து உரிமையாளர் அதை வெட்டியெறிய உத்தரவிடும்போது, தோட்டக்காரர், மேலும் ஓராண்டு பொறுமை காட்டுமாறு வேண்டுகிறார். மற்றோர் ஆண்டு தரப்படுகிறது, கூடுதல் உரமும் இடப்படுகிறது. அதேபோல், நாம் உண்மையான பலன் தருவதற்கு, இறைவன் நின்று, நிதானமாய் செயல்படுவார் என்பதை இவ்வுவமை சொல்லித்தருகிறது.

இறைவனின் பொறுமையைப் பறைசாற்ற "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியைப் பயன்படுத்துகிறோம். இந்தப் பழமொழியின் இரண்டாம் பகுதியில் எனக்கு உடன்பாடு இல்லை. ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பதை விட, ‘தெய்வம் நின்று காக்கும்’ என்பதே என் உறுதியான நம்பிக்கை.

நாம் பயன்படுத்தும் இப்பழமொழியின் இரு பகுதிகளுக்கும் எடுத்துக்காட்டுகள் தருவதுபோல், இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில், இரு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.

'பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான்' (லூக்கா 13: 1) என்ற செய்தி, 'அரசன் அன்று கொல்வான்' என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இச்செய்தியில் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை, இயேசுவின் கூற்று தெளிவாக்குகிறது. அவசரப்பட்டு, அநியாயமாக, மனிதர்களைத் தீர்த்துக்கட்டும் பிலாத்தின் மீது கவனம் செலுத்தாமல், அவனால் கொலை செய்யப்பட்டவர்கள் மீது நம் கவனத்தைத் திருப்புகிறார் இயேசு. அதிலும், கொல்லப்பட்ட கலிலேயர்களை, 'பாவிகள்' என்று அவசரப்பட்டு, முத்திரை குத்திவிட வேண்டாம் என்று இயேசு எச்சரிக்கிறார்.

பிலாத்து செய்த கொலைகளைப் பற்றி பேசும் இயேசு, சூழ இருந்தோருக்கு மற்றொரு நிகழ்வையும் நினைவுபடுத்துகிறார். சீலோவாம் கோபுரம் விழுந்து 18 பேர் கொலையுண்ட செய்தி அது. கோபுரம் விழுந்ததென்று கேட்கும்போது, அது ஒரு நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் பற்றி பேசும்போது, பின்னணியில் இறைவனைப் பற்றியக் கேள்விகள் எழுவதும் இயல்பு.

இந்த நிகழ்வைக் குறிப்பிடும்போதும், 'கோபுரம் விழுந்தது' எப்படி என்ற ஆய்விலிருந்து நம் கவனத்தைத் திருப்பி, கொல்லப்பட்டவர்களை, 'பாவிகள்' என்று அவசரத் தீர்ப்பிட வேண்டாம் என்று சொல்வதிலேயே இயேசு குறியாய் இருந்தார். பலி செலுத்தியவர்களின் கொலை, கோபுரம் விழுந்து மரணம் என்ற இரு நிகழ்வுகளும் புனிதத் தலத்தில் நிகழ்ந்தன என்பது, மேலும் சில கேள்விகளை எழுப்புகின்றன.

திருத்தலங்களுக்குப் போகும் வழியில் அல்லது திருத்தலங்களுக்குச் சென்று திரும்பும்போது, அல்லது, திருத்தலங்களில், ஏற்படும் அளவுக்கதிகமான நெரிசல்களில் உயிரிழப்பவர்களைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுகிறோம், இல்லையா?

நம்மால் புரிந்துகொள்ளக் கூடிய காரணம் ஏதுமின்றி ஏற்படும் துன்ப நிகழ்வுகளில், அதுவும், சிறப்பாக, திருத்தலங்களில், கோவில்களில் ஏற்படும் துன்ப நிகழ்வுகளில், பல கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளின் பின்னணியில் கடவுள் கட்டாயம் இருப்பார். பல நேரங்களில் இந்தக் கேள்விகளுக்கு நாமே சில குழப்பமான, அபத்தமான விளக்கங்களும் தருவோம்.

பலி செலுத்தியவர்களை பிலாத்து கொன்றான் என்ற செய்தியைக் கூறியவர்கள், அவன் செய்தது சரியா, அதைத் தடுக்க கடவுளால் முடியவில்லையா என்ற கேள்விகளுக்கு விடை தேடியே, அந்தச் செய்தியை இயேசுவிடம் கூறியிருக்கவேண்டும். சீலோவாம் கோபுரம் இடிந்து மக்கள் இறந்த நிகழ்விலும் இறைவனை இணைக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும். ஆனால், இக்கேள்விகளுக்கு இயேசு நேரடியாக விடை தந்ததுபோல் தெரியவில்லை. அச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தைச் சரி செய்வதே இயேசுவின் முக்கிய நோக்கமாய் இருந்தது.

துன்பங்களைச் சந்திக்கும்போது, கடவுள் எங்கே? கடவுள் ஏன் இப்படிச் செய்தார்? அல்லது, கடவுள் ஏன் ஒன்றும் செய்யவில்லை? போன்ற கேள்விகள் வழக்கமாக எழும். இத்தகையக் கேள்விகளுக்குப் பதிலாக, மற்ற கேள்விகளை, எண்ணங்களை எழுப்பினால், ஒரு சில தெளிவுகள் பிறக்கும். இதோ, ஓர் எடுத்துக்காட்டு:

ஆறு ஆண்டுகளுக்கு முன் ஹெயிட்டி நாட்டிலும், சென்ற ஆண்டு, நேபாளத்திலும் ஏற்பட்ட நில நடுக்கத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இயற்கைப் பேரழிவுகளின்போது, நம்முடைய மனங்களில், கட்டாயம், 'கடவுள் எங்கே' என்ற கேள்வி, வெகு இயல்பாக எழுந்திருக்கும். கடவுள் எங்கே என்ற கேள்விக்குப் பதில், இந்த நிலநடுக்கத்தில் நாம் எங்கே, மனித சமுதாயம் எங்கே என்ற கேள்விகளையும் எழுப்பலாம்.

நிலநடுக்கமே இப்போது இயற்கையின் விபரீதமா அல்லது மனிதர்கள் இயற்கையை அளவுக்கதிகமாய் சீர்குலைத்து வருவதன் எதிரொலியா என்ற விவாதம் எழுந்துள்ளது. அப்படியே, நிலநடுக்கம், இயற்கையில் எழும் விபரீதம் என்பதை ஒத்துக்கொண்டாலும், ஹெயிட்டி, நேபாளம் போன்ற ஏழை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கங்களில், பெருமளவில் உயிர்கள் பலியாவதற்கு, அங்கு கட்டப்பட்டிருக்கும் தரக் குறைவான கட்டடங்களே காரணம் என்பது வெளிச்சமாகும்போது, மனசாட்சியுள்ள மனிதர்கள் எங்கே என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது. வறிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்போது, வறியோரின் குடியிருப்புக்களே பெருமளவில் தரைமட்டமாகின்றன என்பதும், அந்த இடிபாடுகளில் சிக்கியிருப்போர் வறியோர் என்ற காரணத்தால், அவர்களை மீட்கும் பணிகளிலும் அக்கறையற்ற நிலை உருவாகி, இன்னும் பல நூறு உயிர்கள் பலியாகின்றன என்பதும் நம்மைப்பற்றிய கேள்விகளையே எழுப்புகின்றன. ஆசியக் கடற்கரைகளை சுனாமி தாக்கியபோதும், தகுந்த நேரத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தால், பல்லாயிரம் உயிர்களைக் காப்பற்றியிருக்கலாம் என்பதை நாம் அறிவோம்.

துன்பங்கள் நிகழும்போதெல்லாம் கடவுளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, கேள்விகள் கேட்பதற்குப் பதில், நம்மை அங்கு நிறுத்தி, இத்துன்பம் நிகழ்வதற்கு நாம் எவ்வகையில் காரணமாய் இருந்தோம் என்று ஆய்வு செய்வது நல்லது. இத்துன்பங்களைத் தடுக்க, அல்லது, இத்துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க கடவுள் என்ன செய்யவேண்டும் என்று அவருக்கு விதிமுறைகள் வகுப்பதை விட்டுவிட்டு, இத்துன்பத்திலிருந்து மக்களை மீட்க நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பது பயனளிக்கும்.

இத்தகைய அழைப்பை, இன்றைய முதல் வாசகத்தில், எரியும் புதர் வழியே இறைவன் மோசேக்கு வழங்குகிறார். “மக்களின் துன்பம் கண்டு நான் இறங்கி வந்துள்ளேன். என்னோடு சேர்ந்து நீயும் எகிப்து நாட்டிற்கு வா. அங்குள்ள மக்களை மீட்டுவர என் சார்பில் நீயும் வந்து போராடு” என்ற பாணியில் இறைவன் மோசேயை அழைத்தார். அதே அழைப்பு நமக்கும் தரப்படுகிறது.

கடவுள் தந்த விடுதலைப் பணியை ஏற்க, மோசே தயங்கினார். "நான் போய் என்ன செய்ய முடியும். என்னை உயிரோடு குழிதோண்டி புதைத்துவிடுவார்களே" என்று சொல்லி, ஒதுங்கிவிட மோசே எண்ணினார். இறைவன் அவருக்கு நம்பிக்கை தந்து, அவரது தயக்கங்களை நீக்கி, அவர் வழியாக ஆற்றிய விடுதலை, வரலாறானது.

துன்ப நிகழ்வுகள் நம்மையோ, நம் உலகையோ தாக்கும்போது, கடவுள் எங்கே, கடவுள் ஏன் இவ்வாறு செய்தார், அல்லது செயல்படவில்லை என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, துன்ப நிகழ்வுகள், நம் வாழ்வைத் திருத்தி அமைக்க வழங்கப்படும் எச்சரிக்கைகள் என்பதையும், அதேநேரம், நம்மைத் தேடிவரும் அழைப்புக்கள் என்பதையும் உணர முயற்சிப்போம். உலகில் நிகழும் துயரங்களைக் குறைப்பதற்கு இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இறைவனோடு இணைந்து உழைக்கும் வரம் வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.