2016-02-27 16:07:00

3ம் உலகப்போரை நிறுத்துவதில் திருப்பீடத் தூதர்கள்


பிப்.27,2016. உலகில் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் சண்டைகளுக்கு, துண்டு துண்டாக இடம்பெறும் மூன்றாம் உலகப் போர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெயரிட்டிருக்கும்வேளை, இச்சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உழைக்கும்போது, திருப்பீடத் தூதர்கள் தங்கள் வாழ்வைப் பணயம் வைக்கின்றனர் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

போர் இடம்பெறும் இடங்களில், குண்டு வெடிப்புக்களின் மத்தியில் தொடர்ந்து பணியாற்றிவரும் திருப்பீடத் தூதர்கள் பற்றி, CNS கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் பால் காலகெர் அவர்கள் இவ்வாறு கூறினார்.

உலகில் அமைதியையும், நாடுகளுக்கிடையே ஒப்புரவையும் கொண்டுவரவும்,  நாடுகளையும், சமூகங்களையும், குறிப்பாக, சிறுபான்மை மக்களை, இன்னும் குறிப்பாக, துன்புறுத்தப்பட்டு நசுக்கப்படும் மக்களைப் பாதுகாக்கவும் நாம் உழைக்க வேண்டுமென்றால், நிச்சயமாக ஆபத்துக்களை எதிர்நோக்கத்தான் வேண்டும் என்று கூறினார் பேராயர்  காலகெர்.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசு பெருமளவான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள சிரியா மற்றும் ஈராக்கில், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், பிற சிறுபான்மைச் சமூகங்களின் மக்களும் வெளியேறியுள்ளது குறித்துப் பேசிய பேராயர் காலகெர் அவர்கள், அங்கு நடக்கும் சண்டைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

இப்பகுதி குறித்து தொடங்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள், நல்ல பலனைக் கொடுக்கும், போர் நிறுத்தம் ஏற்பட்டு, மனிதாபிமான உதவிகளுக்கு வழிகள் திறக்கப்படும், மக்களின் துன்பங்கள் மறையும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளியிட்டார் பேராயர்  காலகெர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.