2016-02-26 15:26:00

மரண தண்டனைக்கு எதிராக கத்தோலிக்கர், புத்தமதத்தினர்


பிப்.26,2016. மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்று, அதற்கு ஆதரவாகப் பேசியுள்ளார் தாய்லாந்து நாட்டின் புத்தமதத் தலைவர் ஒருவர்.

மரண தண்டனை வழங்கப்படுவதால், குற்றங்கள் குறைவதுமில்லை, குற்றம் புரிவதிலிருந்து மக்களைத் தடுப்பதுமில்லை என்று கூறியுள்ள, தாய்லாந்து Wat Pa Sukato புத்த மத ஆலயத் தலைவர் Phra Paisal Visalia அவர்கள், மரண தண்டனையை நிறுத்தியுள்ள நாடுகளில், கடும் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன என்பதை, உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 21ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனைகளுக்கு எதிராகவும், இரக்கத்தின் யூபிலி ஆண்டில் மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய Visalia அவர்கள், இவ்வாறு கூறினார்.

கொலை செய்வது அல்லது உயிரை அழிப்பது புத்தமதக் கோட்பாட்டிற்கு எதிரானது என்றும், உயிரைக் கொல்லக் கூடாது மற்றும் அதற்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்பதே புத்த மதத்தினருக்கு மிக முக்கியமானது என்றும் கூறினார் Visalia.

குற்றவாளிகள் மேலும் குற்றங்களைச் செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புக்களை அகற்றுவதற்கு கடும் நடவடிக்கைகள் எடுப்பதால் மட்டுமே, குற்றங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளில் வெற்றியடைய முடியும் என்றும் கூறினார் Visalia. 

தாய்லாந்தில் 2009ம் ஆண்டில் போதைப்பொருள் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.