2016-02-26 15:06:00

திருத்தந்தை:கடவுளே அன்பு, அன்பே வாழ்வின், திருஅவையின் மையம்


பிப்.26,2016. பிறரன்பாகப் புரிந்துகொள்ளப்படும் அன்பே, திருஅவை வாழ்வின் மையம் மற்றும் கடவுளே அன்பு என்ற நம் விசுவாசத்தின் மையமாகவும் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். 

கடவுள் அன்புகூருவதற்கு வெறும் ஆவலையோ, திறனையோ மட்டும் கொண்டிருக்கவில்லை, ஆனால், கடவுளே அன்பு, பிறரன்பே அதன் சாரம் மற்றும் இயல்பு என்றுரைத்த திருத்தந்தை, திருஅவையின் வாழ்வில் பிறரன்பு, அதிகமதிகமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கூறினார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின், “கடவுளே அன்பு”(Deus caritas est) என்ற முதல் திருமடல் வெளியிடப்பட்டதன் பத்தாம் ஆண்டை முன்னிட்டு, திருப்பீட “கோர் ஊனும்” பிறரன்பு அவை, வத்திக்கானில் நடத்திய இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட இருநூறு பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருமடலின் இரு கூறுகள் பற்றி எடுத்துரைத்தார்.

திருஅவையில் உள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிறுவனமும் தனது நடவடிக்கைகளில், கடவுள் மனிதரை அன்பு கூர்கிறார் என்பதை நிரூபித்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற தனது ஆவலை வெளியிட்ட திருத்தந்தை, திருஅவையின் பிறரன்பு நிறுவனங்கள் ஆற்றிவரும் பணிகள் முக்கியமானவை, ஏனெனில், அப்பணிகளில் பல ஏழைகள், மனித மாண்புமிக்க வாழ்வைக் கண்டுணர்கின்றனர், இது எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

இந்தப் பணி, வார்த்தைகளில் அல்ல, இறைத்தந்தையால் அன்புகூரப்படுபவர் என்பதை மனிதர் உணரும் விதத்தில், தெளிவான செயல்களில் வெளிப்படுத்தப்படுவது மிக அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

“கடவுளே அன்பு” திருமடல், திருஅவையின் வரலாறு முழுவதையும் திரும்பிப் பார்ப்பதற்கு நமக்கு உதவுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனித குழந்தை தெரேசா கூறியுள்ளது போன்று, பிறரன்பு, திருஅவை வாழ்வின் இதயமாக உண்மையிலேயே உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, பிறரன்பு, தன் இயல்பிலேயே, பிறரோடு தொடர்பு கொள்வது மற்றும் பகிர்ந்துகொள்வது என்றும் கூறினார்.

“கடவுளே அன்பு” திருமடல், கடவுளின் திருமுகத்தையும், பிறரன்பு, திருஅவையின் வாழ்வில் அதிகமதிகமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இத்திருமடல் வழங்கும் செய்தி, காலத்திற்கேற்றதாய், திருஅவையின் பயணத்திற்கு எப்போதுமே பொருத்தமானதாக உள்ளது என்றும், இந்த உணர்வில் நாம் எவ்வளவுக்கு அதிகமாக வாழ்கிறோமோ, அவ்வளவுக்கு அதிகமாக, நாம் கிறிஸ்தவர்களாக வாழ முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“அன்பு ஒருபோதும் அழியாது” (1 கொரி.13,8) என்ற தலைப்பில், பிப்ரவரி 25,26 தேதிகளில் வத்திக்கானில் இப்பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.