2016-02-26 15:47:00

El Niño கொசுக்கள் தொடர்புடைய நோய்களை அதிகரிக்கும்


பிப்.26,2016. El Niño காலநிலையால், தென் அமெரிக்காவின் சில பாகங்களில், வருகிற மே மாதம் வரை பெய்யவிருக்கும் மழை, வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் மற்றும் கொசுக்கள் தொடர்புடைய நோய்களை அதிகரிக்கும் என்று, உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.

El Niño காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் குறித்து, உலக நலவாழ்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு, சிக்கன்குன்யா, மலேரியா, சீக்கா (Zika) உட்பட கொசுக்களால் பரவும் நோய்கள் பரவக்கூடும் என்று கூறியுள்ளது.

மேலும், El Niño காலநிலையால், கடும் வறட்சி, வெள்ளம், கனமழை, வெப்பநிலை உயர்வு போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீக்கா நோயைப் பரப்பக்கூடிய கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இந்நிறுவனத்தின், புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் துறையின் ஒருங்கிணைப்பாளர் ராமன் வேலாயுதன் அவர்கள் கூறினார்.

El Niño என்பது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின் நீரை வெப்பமடையச் செய்யும் காலநிலையாகும்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.