2016-02-25 15:29:00

திருத்தந்தை: வாசலைத் தட்டும் வறியோரைக் காண்பது ஒரு வரம்


பிப்.25,2016. நம் வாசலைத் தட்டும் வறியோரைக் காண்பது நமக்கு வழங்கப்படும் ஒரு வரம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

லூக்கா நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள  செல்வரும் இலாசரும் உவமையை மையப்படுத்தி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் நன்கு உடை உடுத்தி, விருந்துண்டு வாழ்ந்த செல்வர், தன் வாசலில் கிடந்த ஏழையைக் காண முடியாமல் போனதைப் போல், கிறிஸ்தவர்களால் வாழமுடியும்  என்பது, நமக்கு ஓர் எச்சரிக்கை என்று கூறினார்.

தன் உடை, உணவு, நண்பர்கள் என்று தன்னை மட்டுமே மையப்படுத்திய ஒரு மூடிய உலகில் வாழ்ந்த செல்வரால், அடுத்தவர் உலகைக் காண முடியவில்லை என்று கூறியத் திருத்தந்தை, இவ்வுவமையில் அந்தச் செல்வருக்கு பெயர் குறிப்பிடாமல் இயேசு பேசியது, அவர் தன் சுய அடையாளத்தை இழந்துவிட்டார் என்பதை மறைமுகமாகக் கூறுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மனிதம் என்ற ஆழ்ந்த அடையாளத்தை இழந்து செல்வர் என்ற நிலையில் மட்டும் வாழ்ந்த இவரைப் போல, அருள் பணியாளர், ஆயர் என்ற பட்டங்களை மட்டும் நினைவில் கொண்டு வாழ்வது பயனற்றது, ஏனெனில், அந்தச் செல்வர் மீது இறைவன் இரக்கம் கொண்டிராததுபோல், நம்மீதும் இரக்கம் காட்டாமல் போகக்கூடும் என்று தன் மறையுரையில் எச்சரித்தார், திருத்தந்தை.

தவக்காலத்தில் பயணிக்கும் நாம், இந்த பயணத்தின்போது, நம் மனங்களை எந்தெந்த வழிகளில் மூடி வைத்துள்ளோம் என்ற ஆன்மீக ஆய்வில் ஈடுபடுவது நல்லது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இதயக் கதவுகளைத் தட்டும் வறியோரை காணும் அருளைப் பெற செபிக்க வேண்டும் என்று கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.