2016-02-25 16:02:00

எத்தியோப்பிய முதுபெரும் தந்தை திருத்தந்தையுடன் சந்திப்பு


பிப்.25,2016. பிப்ரவரி 26, இவ்வெள்ளி முதல், 29 வருகிற திங்கள் முடிய, எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் தேவாஹெதோ (Tewahedo) சபையின் முதுபெரும் தந்தை, அருள்மிகு முதலாம் அபுனா மத்தியாஸ் (Abuna Matthias I) அவர்கள், உரோம் நகருக்கு வருகை தந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், முதுபெரும் தந்தை முதலாம் மத்தியாஸ் அவர்கள், பிப்ரவரி 29, திங்களன்று திருத்தந்தையைச் சந்திப்பார் என்றும், அதன்பின், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, பிப்ரவரி 28, ஞாயிறன்று, முதுபெரும் தந்தை முதலாம் மத்தியாஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள எத்தியோப்பிய குழுமத்துடன், உர்பானியா கல்லூரியில் வழிபாடு ஒன்றில் கலந்துகொள்வார் என்றும், புனித பேதுரு பசிலிக்காவில் உள்ள புனித பேதுருவின் கல்லறையில் வணக்கம் செலுத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதுபெரும் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் மத்தியாஸ் அவர்கள் வத்திக்கானுக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.