2016-02-25 15:46:00

'உலகம் தோன்றுவதற்கு முன்பே அன்பு' – திருத்தந்தையின் நூல்


பிப்.25,2016. உலகின் அனைத்துக் குழந்தைகளையும் வத்திக்கானுக்கு வரவழைத்து அவர்களோடு பேச விரும்புகிறேன்; ஆனால், அது முடியாது என்பதால், இந்நூலின் வழியே அவர்கள் அனைவரோடும் பேச விழைகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பெயரால் வெளியான ஒரு நூலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல நாடுகளிலிருந்து குழந்தைகள் எழுதித் தந்த கேள்விகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்த பதில்களைத் தொகுத்து இத்தாலிய மொழியில், L'amore prima del mondo, அதாவது 'உலகம் தோன்றுவதற்கு முன்பே அன்பு' என்ற தலைப்பில் நூல் ஒன்று இவ்வியாழனன்று வெளியானது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் இயேசு சபையினர் நடத்தி வரும் லொயோலா அச்சகத்தைச் சேர்ந்தவர்கள், 6 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எழுப்பும் கேள்விகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதில் அளிக்க விழைவாரா என்ற விண்ணப்பத்துடன் அவரை அணுகியபோது, திருத்தந்தை தன் ஆர்வத்தை வெளியிட்டதால், இந்த முயற்சி துவங்கியது என்று லொயோலா அச்சக இயக்குனர் Paul Campbell அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

உலகின் 26 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் 14 மொழிகளில் எழுதித் தந்த 259 கேள்விகளில், 31 கேள்விகள் தெரிவு செய்யப்பட்டு, திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது என்று லொயோலா அச்சக இயக்குனர் Campbell அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.  

குழந்தைகள் எழுப்பியிருந்த 31 கேள்விகளும், அவற்றிற்கு திருத்தந்தை வழங்கிய பதில்களும், அக்குழந்தைகள் வரைந்திருந்த ஓவியங்களும் அடங்கியுள்ள இந்நூலில், இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மான்சி எக்கா (Manci Ekka) என்ற 12 வயது சிறுமியின் கேள்வியும், ஓவியமும் அடங்கும்.

திருத்தந்தையின் குழந்தைப் பருவம், அவர் பீடச் சிறாராக இருந்தபோது பெற்ற அனுபவங்கள், அவருக்குப் பிடித்த கால்பந்தாட்டம், அவரது நடனத் திறமை என்ற பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்நூலில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை.

லொயோலா அச்சகம் இத்தாலிய மொழியில் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, மார்ச் முதல் தேதியன்று, "Dear Pope Francis" அதாவது, "அன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ்" என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

குழந்தைகளை மனதில் வைத்து இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும், இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள், பெரியோருக்கும் ஏற்றவையே என்று, லொயோலா அச்சக இயக்குனர், அருள்பணியாளர், Campbell அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.