2016-02-25 15:41:00

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை : ஆய்வுத் தகவல்


பிப்.25,2016. இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதுகாப்பான நகரம் சென்னையே என்று மெர்சர் (Mercer) குளோபல் கன்சல்டன்சி நிறுவன ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, குறைந்த அளவிலான குற்ற நடவடிக்கைகள், ஓரளவுக்கு மேம்பட்ட சட்ட ஒழுங்கு விதிமுறைகள் அடிப்படையில் சென்னை பாதுகாப்பான நகரம் என்று மெர்சர் நிறுவனத்தின் வாழ்நிலை தர நிலவரம் மீதான ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வுக்காக உலகம் முழுதும் 230 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. உலக அளவில் பாதுகாப்பான நகரமாக சென்னை 113-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஹைதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு உட்பட 7 நகரங்களில் சென்னையே பாதுகாப்பில் சிறந்தது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆனால், நகர் வாழ் மக்கள் தொகுதியில் தரமான வாழ்நிலையை வழங்குவதில் 7 இந்திய நகரங்கள் பட்டியலில் சென்னை 4-ம் இடத்திலேயே உள்ளது. தரமான வாழ்நிலையில் உலக அளவில் சென்னைக்கு 150-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் தரம், குற்ற நடவடிக்கைகளின் குறைந்த அளவு, சட்ட அளவுகோல்கள், குறைந்த மாசு, மற்றும் நல்ல கல்வித்தரம் ஆகியவற்றின் மூலம் மக்கள் விரும்பும் நகரமாக சென்னை மேலும் வளர்ச்சியுறும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

“சென்னையில் மற்ற நகரங்கள் போல் வன்முறை ஊர்வலங்களோ, பயங்கரவாத அச்சுறுத்தல்களோ இல்லை. மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில், காவல்துறையினரின் இலஞ்ச நடவடிக்கைகளும் சென்னையில் குறைவு. சென்னையில் வாழும் மக்கள் சட்டத்துக்குட்பட்டு நடப்பவர்களாக உள்ளனர்” என்று மெர்சர் நிறுவனத்தின் முதல்வர் ருச்சிகா பால் கூறினார்.

மேலும், நல்ல தரமான பள்ளிகள், போக்குவரத்தில் மெட்ரோ இரயில் சேவை உட்பட வாழ்க்கைத் தரத்தின் சற்றே உயர்ந்த நிலை, போக்குவரத்து நெரிசல் குறைவு ஆகியவற்றின் மூலம் சென்னை வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்கிறது இந்த ஆய்வு.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.