2016-02-25 16:05:00

இந்தியாவில் 1000 கைதிகளை அரசு விடுவிக்க விண்ணப்பம்


பிப்.25,2016. இரக்கத்தின் யூபிலி ஆண்டையொட்டி, இந்தியாவின் சிறைகளில் உள்ள 1000 கைதிகளை இந்திய அரசு விடுவிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை, இந்தியாவில் பணியாற்றிவரும் பிரான்சிஸ்கன் துறவியர் விடுத்துள்ளனர் என்று பிதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அசிசி நகர் புனித பிரான்சிஸ், மற்றும் புனித கிளேர் ஆகியோரின் பாதையில், இரக்கத்தை மையப்படுத்தி செயலாற்றிவரும் பிரான்சிஸ்கன் துறவியருக்கு, இந்த யூபிலி ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட அழைப்பை விடுத்துள்ளார் என்றும், அதன் எதிரொலியே இந்த முயற்சி என்றும் இத்துறவு சபையின் சார்பில் பேசிய அருள்பணி நித்திய சகாயம் அவர்கள் கூறினார்.

பிரன்சிஸ்கன் சபையைச் சேர்ந்த இருபால் துறவியர், மற்றும் இத்துறவு சபையுடன் இணைந்துள்ள பல்வேறு பொதுநிலையினர் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து உருவான பிரான்சிஸ்கன் குடும்பம் என்ற பெயரால் 1000 கைதிகளின் விடுதலை குறித்த விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது என்று பிதேஸ் செய்தி கூறுகிறது.

சிறைக் கைதிகளின் மறுவாழ்வில் ஈடுபட்டுள்ள பிரான்சிஸ்கன் குடும்பத்தினர், சிறு குற்றங்களால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 1000 கைதிகளை விடுவிக்க, இந்த யூபிலி ஆண்டில் அரசு முன்வர வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.