2016-02-24 15:04:00

நீதி, பிறரன்பு, இரக்கம் சார்ந்ததாக, செல்வமும் அதிகாரமும்


பிப்.,24,2016. கடந்த சில நாட்களாக, உரோம் நகரில் குளிர் சிறிது சிறிதாக குறைந்துவரும் நிலையில், இப்புதன் காலை, சூரியன் தன் கதிர்களைப் பிரகாசமாகப் பரப்ப, வத்திக்கான் தூய பேதுரு வளாகம் நிரம்பி வழிந்தது.  திருத்தந்தையும், 'இரக்கத்தின் யூபிலி ஆண்டு' குறித்த தன் மறைக்கல்வி உரையைத் தொடர்ந்தார்.

செல்வத்தையும் அதிகாரத்தையும் எவ்விதம் பயன்படுத்துவது என்பது குறித்து விவிலியம் நமக்குக் கற்றுத் தருவதை, இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இன்றைய மறைக்கல்வி உரையில் நோக்குவோம். நீதி, பிறரன்பு, இரக்கம் ஆகியவைகளின் எதிர்பார்ப்புகளுக்கு இயைந்த வகையில் பயன்படுத்தப்படும்போதுதான், செல்வமும் அதிகாரமும் பொதுநலனுக்குப் பணியாற்றுவதாக இருக்க முடியும் என்பதை விவிலியம் நமக்குக் காட்டுகிறது. செல்வமும் அதிகாரமும், சுயநலத்துடனும் அகந்தையுடனும் பயன்படுத்தப்படும்போது, அவை ஒழுக்கக்கேடு மற்றும் மரணத்தின் காரணிகளாக மாறுகின்றன. இதைத்தான் நாம் நாபோத் பற்றிய விவிலிய நிகழ்வில் காண்கிறோம். முதல் அரசர்கள் புத்தகம் 21ம் பிரிவில், அரசன் ஆகாபின்  திராட்சைத் தோட்ட ஆசையால், நாபோத், அநீதியான முறையில் கொல்லப்பட்டதைக் காண்கிறோம்.  ஆனால், இயேசு நமக்குக் கற்பிப்பதோ, பிறரை அதிகாரம் செய்வதன் வழியாக அல்ல, மாறாக, ஒருவருக்கொருவர் தாழ்ச்சியுடன் பணிவிடை புரிவதன் வழியாகவே ஒருவர் தன் மேன்மைத் தன்மையை வெளிப்படுத்த  முடியும் என்பதாகும். ஆகாபு மனம் திருந்தவேண்டும் என்பதற்காக, ஆண்டவர் எலியாவை ஆகாபிடம் அனுப்பியதுபோல்,  ஆண்டவர் தம் மகனை நம்மிடம் அனுப்பினார். பாவம் மற்றும் அநீதியை வெற்றிகொள்ளும் இறை இரக்கத்தின் வல்லமையைக் காண்பிப்பதற்காக அவர், தம் மகனை அனுப்பினார். இயேசுவே உண்மையான அரசர். அவரின் மீட்பு வல்லமை சிலுவையில் வெளிப்படுத்தப்பட்டது. இந்த புனித ஆண்டில், பாவிகள், இயேசுவின் அருகில் வரவேண்டும் என அவரை நோக்கி வேண்டுவோம். அவர் தம் இரக்கத்தை, பாவிகளாகிய நமக்கு வெளிப்படுத்தட்டும். தம் அருள் மற்றும் மன்னிப்பின் வல்லமையால் அவர், இவ்வுலகின் அநீதச் சூழல்களிலிருந்து நம்மை மீட்கட்டும், என விண்ணப்பிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.