2016-02-24 14:52:00

இது இரக்கத்தின் காலம்... – கோபம் எனது அடிமை, நீயோ அதன் அடிமை


அண்டை நாட்டைக் கைப்பற்றிய ஒரு பேரரசர், ஒரு நாள் மாலை, காட்டில் வேட்டையாடச் சென்றார். அப்போது தன் எதிரே வயதான முனிவர் ஒருவர் வருவதைக் கண்டு குதிரையிலிருந்து கீழிறங்கி அவருக்குத் தலை வணங்கினார். அந்த முனிவரின் கண்கள் சாந்தமும், தெய்வீக ஒளியும் நிறைந்து காணப்பட்டன.

“ உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், என்னுடன் என் சொந்த நாட்டிற்கு வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள்” என்று முனிவரை, தன் நாட்டிற்கு அழைத்தார் பேரரசர்.

முனிவரோ, “எனக்கு எதுவும் வேண்டாம் மன்னரே, இந்நாடும், நான் வாழும் காடுகளும் எனக்குப் போதுமான மகிழ்ச்சியைத் தருகின்றன” என அமைதியாகக் கூறினார்.

தனது வேண்டுகேளை நிராகரித்ததால் கோபம் தலைக்கேறிய பேரரசர், தன் இடைவாளை உருவியபடி முனிவரை நோக்கி, “மடையனே!! நான் யாரென்று தெரியுமா? எத்தனை நாடுகள் எனக்கு இன்று அடிமை என்று தெரியுமா?. என் ஆணையை மறுத்ததற்கு, இப்பொழுதே என்னால் உன்னைக் கொல்ல முடியும், மரியாதையாக நான் சொல்வதைக் கேள்” என்றார்.

முனிவரோ தைரியமாக, “உங்களால் மாயையான என் உயிரைக் கொல்ல முடியாது. என் உயிரைப் போர்த்திய உடலை மட்டுமே கொல்ல முடியும். இந்த உடல் என் உயிரைப் போர்த்திய ஆடை மட்டுமே”, என்று அமைதியாக்க் கூறி மீண்டும் தொடர்ந்தார், “அரசே உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என் அடிமையின் அடிமை” என்று சிறிதும் தயங்காமல் புன்னகையுடன் கூறினார்.

“நான் என்ன உன் அடிமையின் அடிமையா?. ஏன் அப்படி சொல்கிறாய்?”, என்று கோபத்துடன் கேட்டார் பேரரசர்.

“என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும், கோபம் எனது அடிமையாகும், ஆனால் நீங்களோ எளிதாக உங்கள் கோபத்திற்கு ஆளாகிவிடுகிறீர்கள், நீங்கள் கோபத்தின் அடிமை, அதனால்தான் உங்களை என் அடிமையின் அடிமை என்கிறேன்” எனக் கூறினார் முனிவர்.

முனிவரின் போதனை, அவரின் தவறை உணரச் செய்தது. வாயடைத்தவராக அங்கிருந்து சென்றார் பேரரசர்.

நம்மை நாம் உணர்ந்துகொள்ள, இந்த இரக்கத்தின் காலம் நமக்கு உதவட்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.