2016-02-23 15:01:00

கிறிஸ்தவம், இயல்பிலேயே நன்மைக்காகச் செயல்படும் மதம்


பிப்.23,2016. கிறிஸ்தவம், தன் இயல்பிலேயே நன்மைக்காகச் செயல்படும் ஒரு மதமாக, உள்ளது, ஆனால், வெளிவேடம் மற்றும் தற்பெருமையால் ஆன மதமாக அது பேசப்படக் கூடாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

கடவுளின் உண்மையான தன்மை பற்றியும், சேவை செய்வதற்கு, குறிப்பாக, அதிகம் தேவையிலுள்ள அடுத்திருப்பவர்களுக்குப் பணிசெய்வதற்கு ஒரு வாய்ப்பாகக் கருதாமல், விசுவாசத்தை, ஒரு காட்சிப் பொருள்போன்று கொண்டிருக்கும் பல கிறிஸ்தவர்களின் போலித்தனம் பற்றியும் மறையுரையில் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைநூல் அறிஞரும், பரிசேயரும் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள், ஏனெனில் அவர்கள் சொல்வார்கள், செயலில் காட்டமாட்டார்கள் என்று இயேசு மக்கள் கூட்டத்திற்குக் கூறியிருப்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, சொல்லிவிட்டு செய்யாமல் இருப்பது ஏமாற்று வேலையாகும் என்றுரைத்தார்.

தீமை செய்வதை விட்டொழிப்பதும், நன்மை செய்யக் கற்றுக்கொள்வதும், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்வதும், நீதியை நாடித் தேடுவதும், கைம்பெண்ணுக்காக வழக்காடுவதும் கடவுளுக்கு விருப்பமானவை என்ற எசாயாவின் வார்த்தைகளையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இவை, இறைவனின் எல்லையற்ற இரக்கத்தையும் காட்டுகின்றன என்று கூறினார்.

இறுதித் தீர்ப்புப் பற்றி மத்தேயு நற்செய்தி கூறுவதையும் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெறும் பேச்சு தற்பெருமைக்கே இட்டுச்செல்லும், எனவே, சொல்வதற்கும், செய்வதற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை நன்றாகப் புரிந்துகொள்ளும் ஞானத்தை ஆண்டவரிடம் கேட்போம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.