2016-02-23 15:25:00

இந்தோனேசியா-பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பதற்கு ஆதரவு


பிப்.23,2016. இந்தோனேசியாவில் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களை ஒழிப்பதற்கு அரசு முன்வைத்துள்ள புதிய நடவடிக்கைக்கு, அந்நாட்டின் கத்தோலிக்கர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்திற்கு ஆதரவாக, ஜகார்த்தா உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்சகோதரிகள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட கத்தோலிக்கர், ஜகார்த்தா சாலைகளில் பேரணிகளை நடத்தி தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

ஜகார்த்தாவில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு காரணம் கழிவுப் பொருள்கள் என்பதால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் குடிமக்களுக்குப் பொறுப்பு உள்ளது என்று, இந்தோனேசிய தேசிய கழிவுப்பொருள் விழிப்புணர்வு தினத்தன்று கத்தோலிக்கரை ஒருங்கிணைத்த அருள்பணி Alexius Andang Listya Binawan அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 21ம் தேதியன்று நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில், “சுற்றுச்சூழலைத் துணிந்து பாதுகாப்போம்” என்று எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கி கத்தோலிக்கர், தெருக்களில் பேரணிகளை நடத்தினர்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தில், ஜகார்த்தாவில், ஒரு பைக்கு 200 இந்தோனேசிய ரூபாய் என்று விற்குமாறு அரசு கடைகளுக்கு கூறியிருந்தது. மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கும் நோக்கத்தில், அரசு இதை ஒரு பரிசோதனை முயற்சியாக நடத்தியது.

இந்தோனேசிய அரசின் அறிவிப்புப்படி, ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் டன்கள் அல்லது ஆண்டுக்கு 6 கோடியே 40 இலட்சம் டன்கள் என்ற அளவில், கழிவுகள் குவிகின்றன.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.