2016-02-23 14:19:00

இது இரக்கத்தின் காலம் : மன்னிப்பு மழை மேகம்


70 வயது நிறைந்த அருள்பணியாளர் ஒருவர், ஒரு துறவு சபையில் தலைமைப் பொறுப்பில் பல ஆண்டுகள் பணியாற்றியபின், திருத்தலம் ஒன்றில் பணியாற்றச் சென்றார். திருத்தலத்திற்கு வரும் மக்களுக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்குவது, அவரது முழுநேரப் பணியாக இருந்தது. ஒப்புரவு அருளடையாளம் வழியே பெறக்கூடிய பாவ மன்னிப்பை ஓர் அர்த்தமுள்ள அனுபவமாக மக்கள் பெறுவதற்கு, அந்த அருள் பணியாளர் உதவி செய்தார். அவரைத் தேடி, அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர், வறியோர், செல்வந்தர் என்று பலர், சாரை, சாரையாகச் சென்றனர்.

ஒருநாள் அம்மறைமாவட்டத்தின் ஆயர், அந்த அருள்பணியாளரைச் சந்திக்கச் சென்றபோது, அருள்பணியாளர், ஆயரிடம், "நான் மிக எளிதாக, மிகத் தாராளமாக மன்னித்து விடுகிறேனோ என்ற நெருடல் எனக்குள் அவ்வப்போது எழுகிறது" என்று சொன்னார். "ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?" என்று ஆயர் கேட்க, "என்னிடம் வரும் அனைவருக்கும், எப்படியாவது மன்னிப்பு வழங்கிவிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் அதிகம் உள்ளது. இது சரியா, தவறா என்று தெரியவில்லை" என்று கூறினார்.

"அப்படி நீங்கள் உணரும்போது என்ன செய்கிறீர்கள்?" என்று ஆயர் மீண்டும் கேட்டார். அதற்கு, அந்த அருள்பணியாளர், "அந்நேரங்களில், நான் கோவிலுக்குச் சென்று, நற்கருணைப் பேழைக்கு முன் அமர்ந்து, ஆண்டவரிடம் பேசுவேன்" என்று அருள் பணியாளர் சொன்னார். "ஆண்டவரிடம் என்ன பேசுவீர்கள்?" என்று ஆயர் மறுபடியும் கேட்டதற்கு, அந்த அருள் பணியாளர், "'ஆண்டவரே, என்னை மன்னியும். இன்று நான் மிக, மிக, தாராளமாக மன்னிப்பு வழங்கிவிட்டேன். ஆனால், நான் இவ்விதம் நடந்து கொள்வதற்கு நீங்கள்தான் காரணம். இவ்வாறு மன்னிப்பதற்கு, உங்களிடமிருந்துதான் நான் பழகிக்கொண்டேன்' என்று ஆண்டவரிடம் பேசுவேன்" என ஆயருக்குப் பதில் சொன்னார். ஆயர், அந்த அருள்பணியாளரை மனதாரப் பாராட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

மன்னிப்பு மழை மேகங்கள் திரண்டு வந்தால், வெறுப்புத் தீ அணைந்து போகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.