2016-02-22 14:50:00

வாரம் ஓர் அலசல் – தீர விசாரிப்பதே மெய்


பிப்.22,2016. எனது குழுவிலுள்ள சகோதரி ஒருவர், மதியம் வேலைக்குச் சென்று, வேலை முடிந்து, அன்று இரவு ஒன்பது மணியளவில் களைப்போடு வீடு திரும்பினார். நானும் அந்த நேரம், சுகமில்லாமல் படுத்திருந்தேன். வீட்டுக் கதவு திறக்கும் சப்தம் கேட்டு முழித்து சகோதரியிடம் பேச்சுக் கொடுத்தேன். எனக்குத் தலைவலி, ஏற்கனவே மாத்திரை எடுத்துவிட்டேன், சாப்பாடு வேண்டாம் என்று உடனடியாகப் படுக்கப் போய்விட்டார்கள். அடுத்த நாள் அதிகாலையிலே சகோதரி எழும்பி, குளித்து முடித்து காப்பி குடித்தார். சமையலறைப் பக்கம் சென்ற நான், இரவில் ஒன்றும் சாப்பிடவில்லை, அதிகப் பசி போலும், அதுதான் காலையிலே காப்பி குடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில் வழக்கமாக சகோதரி அதிகாலையில் காப்பி குடிப்பதில்லை. சரி செபம் சொல்லலாமா என்று கேட்டேன். அவர்களும் சரி என்று கோவிலில் எனக்காகக்  காத்திருந்தார்கள். நானும் ஆர அமரச் சென்றேன். செபத்திற்குப் போனால், சகோதரி வேலைக்குச் செல்வதற்கு எல்லாம் தயாராக இருந்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது சகோதரிக்கு இன்று காலை வேலை என்று. அன்று அவர்களுக்கு பிற்பகல் வேலை என்றுதான் அதுவரை நினைத்திருந்தேன். அன்று, அதிகாலையில், ஒருசில நிமிடங்களில் உடன் வாழ்பவரின் செயல்கள் பற்றி எனக்கு எத்தனையோ மனக்கணக்குகள். எனது எண்ணங்கள் பற்றி பின்னர் மாலையில் நாங்கள் இருவரும் பேசிச் சிரித்துக்கொண்டோம். அன்பு நேயர்களே, இப்படி உங்கள் வாழ்விலும் அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். என்ன ஏது என்று சரியாகத் தெரியாமல், சரியாகப் பார்க்காமல், சரியாகப் புரிந்து கொள்ளாமல் சிறிது நேரத்தில் பிறரின் செயல்கள் பற்றிச் சரியாகவோ அல்லது தவறாகவோ கணித்து விடுகிறோம். அந்த ஆளைப் பாருங்க, போக்கே சரியில்லை, அந்த ஆள் பார்வையிலே ஒரு திமிர் இருக்கு! என்னமோ பெரிய இவருன்னு நினைப்பு என்று, பெரிய உளவியல் நிபுணர் போன்று வெகு எளிதாக,  அடுத்தவரைப் பற்றிய ஒரு முன்தீர்மானத்திற்கு வந்துவிடுகிறோம். ஓர் அலுவலகத்தில் தனக்கு நேர்ந்ததை ஒரு பெரியவர் பகிர்ந்து கொண்டதை விகடன் இதழில் வாசித்தோம்.

எனது அலுவலகத்தில் வராந்தாவில் அந்த மூத்த நபர் கம்பீரமாக நடந்துவரும்போதெல்லாம் எதிரே செல்லவே எனக்குத் தயக்கமாக இருக்கும். அவரைப் பார்த்தவுடன், எதுவும் தெரியாததுபோல், அங்கு அருகில் வேலை செய்துகொண்டிருக்கும் நண்பரிடம் ஏதாவது சந்தேகம் கேட்பது போல் திரும்பி நின்று விடுவேன். அவர் போனதும் நான் என் வழியே போவேன். ஒருநாள் அந்த மூத்த நபரிடம் நான் வசமாக மாட்டிக் கொண்டேன். எதிரே அவர் வருவதைப் பார்த்து, வழக்கம்போல் நான் திரும்பி நிற்கவும், அவர் என் அருகில் வந்து, “என்ன பிரச்சனை உனக்கு? நீ திறமைசாலி, சுறுசுறுப்பானவர், வேலையில் நேர்மையாக இருக்கிறவர் என்று முதலாளி உன்னைப் பற்றி, ஆஹா, ஓஹோ என்று சொல்கிறார், எனக்கும் அதில் சந்தேகமே இல்லை. ஆனால், உனக்கேற்ற மரியாதையும் இடமும் இங்கே கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறாயா? இல்லை, என்னைப் போன்ற மூத்த வயதானவர்கள் ஒதுங்கி இடம் விடாமல், நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்களே என்று நினைக்கிறாயா? என் தலையைக் கண்டபோதெல்லாம் என்னை அவமதிப்பது மாதிரி முகத்தைத் திருப்பிக்கொள்கிறாய், ஏன்? உனக்கு என் மீது அத்தனை வெறுப்பா?” என்று நிறுத்தி நிதானமாக அவர் கேட்டதும், “ஐயா...”ன்னு நான் பதறிவிட்டேன் என்று அவர் சொன்னதும், மூத்த அலுவலகர் அவரிடம்,“ பதறாமச் சொல்லுப்பா...! நான் உன்னை ரொம்ப நாளா கவனிச்சிட்டுத்தான் வரேன். நானா உன்னைப் பத்தின முன்முடிவுக்கு வந்துடக் கூடாதுன்னுதான் உங்கிட்டேயே கேக்கறேன். தைரியமா சொல்லு!” என்று சொல்லவும், அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்....

“இல்லை சார்! நீங்க ரொம்பப் பெரியவங்க. உங்க முன்னே நிக்கக்கூட எனக்குத் தகுதியில்லை. உங்க மேல எனக்கு இருக்கிறது ஒரு மரியாதை கலந்த பயம். அதனாலதான் ஒதுங்கி நிக்கறேன்”னு பவ்வியமாச் சொன்னேன்.

இதைக் கேட்டுச் சிரித்த மூத்தவர், “மரியாதை மனசுல இருந்தா போதும்! இங்கே நீயும் வேலைக்காரன்; நானும் வேலைக்காரன். யாரும் உயர்வா, தாழ்வா இல்லே. என்ன, உன்னைவிட எனக்கொரு பத்துப் பன்னிரண்டு வருடம் அனுபவம் இருக்கலாம். ஆனா, உனக்குத் தெரிஞ்ச பல விடயங்கள் எனக்குத் தெரியாது. நீ அலட்டிக்கொள்ளாமல் செய்து முடிக்கிற பல விடயங்களை என்னால செய்ய முடியாது. திணறுவேன். இளம் இரத்தத்தோடு இந்த வயதான இரத்தம் போட்டி போட முடியாது. புரியுதா? இந்த நிறுவனம் என்ன, நாளைக்கு இந்த உலகத்தையே இளையோர்தான் ஆளப் போறீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்!” என்று முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு நகர்ந்து போயிருக்கிறார். ஆம். அந்த மூத்தவர், இளையவர் பற்றி, தானாகவே தப்புக் கணக்கு போடாமல், அவரிடமே மனம் விட்டுப் பேசிப் புரிந்துகொண்ட தன்மை எல்லாருக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! மற்றவர் பற்றி நாமாக யூகித்து முன்முடிவுகள் எடுப்பது பிரச்சனையை மேலும் வளர்க்கத்தான் செய்யும். பிரச்சனைகளுக்கு, உரையாடல் வழியாகத் தீர்வு காண வேண்டுமென்றுதான் உலகில் நன்மனம் கொண்ட எல்லாரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சிரியாவில் தினமும் குண்டு வெடிப்புகள். இஞ்ஞாயிறன்று ஹோம்ஸ் மற்றும் தமாஸ்கஸ் நகரங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் ஏறக்குறைய 130 பேர்  இறந்துள்ளனர். பங்களாதேஷில், Jogeswar Roy என்ற 45 வயது இந்துமதக் குரு,  ஐ.எஸ்.இஸ்லாமிய அரசின் ஆட்களால் தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மொசூல் நகரில், Ayham Hussein என்ற 15 வயதுச் சிறுவன், மேற்கத்திய பாப் இசையைக் கேட்டான் என்பதற்காக, இதே ஐ.எஸ். அரசு, அச்சிறுவனின் தலையை வெட்டிக்கொன்றுள்ளது. இந்தக் கொடுமையைப் பலர் வேடிக்கை பார்ப்பதை, Youtubeல் பார்த்தபோது நெஞ்சு கனத்தது. 2015ம் ஆண்டில் ஐ.எஸ் அரசுக்காகப் போரிட்டு இறந்த சிறார் படைவீரர்களின் எண்ணிக்கை ஏற்கனவே கணக்கிடப்பட்டதைவிட இரு மடங்கு அதிகம் என்று கடந்த சனிக்கிழமையன்று செய்தி வெளியாகியுள்ளது. சிரியாவில் இடம்பெற்றுவரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, உலகத் தலைவர்கள் ஜெனீவாவில் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தையும் வெற்றியடையவில்லை. மேலும், பாகிஸ்தானில், தெய்வநிந்தனை குற்றச் சாட்டின்பேரில், தீர விசாரிக்காமல், எத்தனை எத்தனை கொடுமைகள் அரங்கேறுகின்றன!

போர்களால் அப்பாவி மனிதர்கள் ஒருபுறம் இறந்துகொண்டிருக்க, மரண தண்டனைகளாலும் மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன. உலகில் மரண தண்டனைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்குக் குரல் கொடுத்துவரும் உரோம் சான் எஜிதியோ கத்தோலிக்க பக்த அமைப்பு, இத்திங்களன்று, “மரண தண்டனை இல்லாத உலகம்” என்ற தலைப்பில், ஓர் அனைத்துலக கருத்தரங்கைத் தொடங்குகின்றது. இது குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள், மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“மரண தண்டனை நிறைவேற்றுவதை இரத்து செய்வதற்கு ஒருமித்த தீர்மானங்களை எடுக்குமாறு, நாடுகளை ஆள்பவர்களின் மனசாட்சிக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு உழைக்குமாறு,  கத்தோலிக்கருக்கும், நன்மனம் கொண்ட அனைவருக்கும்  அழைப்பு விடுக்கிறேன். அதோடு, சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களின் மனித மாண்பு மதிக்கப்பட உழைக்குமாறும்”கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு நேயர்களே, ஒருவரைப் பார்த்தவுடன், அவரின் செய்வதைக் கண்டவுடன், மனம்போன போக்கில் அவர் பற்றி நாம் தப்புக் கணக்குப்போடும்போது அம்மனிதரின் மாண்பை அவமதிக்கின்றோம், அவரின் மனிதத்தை, மனித உணர்வுகளை, அதனால் அவரது நற்பெயரைக் கெடுக்கின்றோம். ஒருசமயம், நியூயார்க் நகரில், ஒரு இரயில் நிலையத்தில் ஸ்டீபன் என்பவர் இரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அங்குச் சிலர் தினத்தாள் வாசித்துக்கொண்டிருந்தனர், சிலர் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்தனர். சூழ்நிலையே மிகவும் அமைதியாக இருந்த நேரத்தில், ஒருவர் தன் குழந்தைகளோடு அங்கே வந்து ஸ்டீபன் பக்கத்தில் அமர்ந்தார். அந்தக் குழந்தைகள் அங்கே இங்கே ஓடிக். கத்திக் கூச்சல்போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு குழந்தை, ஏதோ ஒரு பொருளைத் தூக்கி எறிந்தது. மற்றொரு குழந்தை, படித்துக்கொண்டிருந்த ஒருவரின் தினத்தாளைப் பிடித்து இழுத்தது. ஒரே சப்தம். அங்கிருந்தவர்களுக்கு எரிச்சல். ஆனால் எதுவுமே நடக்காதது மாதிரி அக்குழந்தைகளின் தந்தை, கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். அப்போது ஸ்டீபன் அவரை இலேசாகத் தொட்டு, “என்ன சார், உங்க பிள்ளைங்க இத்தனை குறும்பு பண்றாங்க. நீங்க கண்டிக்க மாட்டீங்களா?”ன்னு கோபத்தோடு கேட்டார். திடுக்கிட்ட மாதிரி கண் விழித்த அவர், “ஆமாம்... பிள்ளைங்களை எப்படி அடக்கறதுன்னு எனக்கு எதுவும் தெரியலே சார்! நாங்க இப்போ நேரா மருத்துவமனையிலேர்ந்துதான் வர்றோம். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் அங்கே என் மனைவி, இதுங்களோட அம்மா செத்துப் போயிட்டா...”ன்னார். அவ்வளவுதான்... அந்த இடத்தில் அமர்ந்திருந்த எல்லார்க்கும் அந்த மனிதர் மீது இருந்த எரிச்சல் நீங்கி ஒரு பரிதாபம் ஏற்பட்டது. அன்பர்களே, இந்நிகழ்வை நீங்கள் ஏற்கனவே கேட்டுள்ளீர்கள். இதில் ஒருவருடைய சூழ்நிலையின் பின்ணணி தெரியாதபோது இருந்த மனநிலை வேறு, தெரிந்த பின்னர் ஏற்பட்ட உணர்வுகள் வேறு. எனவே ஒருவர் செய்யும் செயலை முழுவதும் அறிவதற்கு முன்னரே அவரைப் பற்றித் தீர்ப்பிடுவதால் எவருக்கும் நன்மை பயக்காது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர ஆராய்வதே மேல் என்று இதனாலே பெரியவர்கள் சொல்கிறார்கள். “எப்பொருளை யார் யார் வாய்க் கேட்டாலும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் காணும் அறிவை வளர்ப்போம். தேவையில்லாமல் பிறரின் வாழ்வில் தலையிடாமல் இருந்து, அவர்களை நிம்மதியாக வாழ விடுவோம். தேவைப்படின் தீர விசாரிப்போம். இதனால் பிறரின் மனிதம் மதிக்கப்படும், பிறரோடு உள்ள உறவுகளும் மேம்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.