2016-02-22 14:54:00

திருத்தந்தை - மெக்சிகோ திருத்தூதுப் பயணம் பற்றிய சிந்தனைகள்


பிப்.22,2016. தான் அண்மையில் நிறைவு செய்த மெக்சிகோ திருத்தூதுப் பயணம் பற்றிய சிந்தனைகளை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டு விசுவாசிகளின் சான்று வாழ்வைப் பாராட்டினார்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் இயேசுவின் உருமாற்றம் பற்றிப் பேசுகிறது, தனது மெக்சிகோ திருத்தூதுப் பயணமும், உருமாற்றத்தின் ஓர் அனுபவமாக இருந்தது என்றும், மெக்சிகோவில் வாழும் புனித மக்களாகிய தம் திருஅவையின் உடல் வழியாக, நம் ஆண்டவர், தமது மகிமையின் ஒளியைக் காண்பித்தார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெக்சிகோவுக்குத் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்திற்குச் செல்வதை மையம் கொண்டிருந்தது, இந்தப் புதுமை அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாகத் தியானித்தபோது, தங்களின் துன்பங்களோடு வருகின்ற பல திருப்பயணிகள் மீது அவ்வன்னை காட்டும் அன்பும், பரிவன்புமே நினைவுக்கு வந்தன என்றும் கூறினார் திருத்தந்தை.

குவாதலூப்பே அன்னை மரியா, மெக்சிகோ மக்களின் சிறப்பு மரபுரிமைச் சொத்தாக இருக்கிறார் என்றும், அமெரிக்கா முழுவதிலுமிருந்தும் மக்கள் அவ்வன்னையைத் தரிசிக்க வருகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குவாதலூப்பே அன்னை மரியாவுக்கும், புனித ஹூவான் தியெகோ அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு, அமெரிக்காவில் நற்செய்தி அறிவிப்பை ஆரம்பித்து வைத்தது என்றும், பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பின் பலனாக அமெரிக்கக் கண்டத்தில் ஏற்பட்ட புதிய கலாச்சாரத்தையும் இது தொடங்கி வைத்தது என்றும் கூறினார் திருத்தந்தை.

மெக்சிகோ திருத்தூதுப் பயணம், நன்முறையில் அமைந்ததற்கு, ஆண்டவருக்கும், குவாதலூப்பே அன்னை மரியாவுக்கும், இன்னும், மெக்சிகோவுக்குத் தன்னை வரவழைத்து, தனக்கு இனிய வரவேற்பு வழங்கிய எல்லாருக்கும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

இத்திருத்தூதுப் பயணத்தின் தொடக்கத்தில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்கு மூவொரு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிப்புப் பாதையில் நாம் தொடர்ந்து நடக்க, இறைவனின் தாய் நம்மை வழிநடத்துவாராக என்று மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.