2016-02-22 15:14:00

தாய்மொழிகளில் தரமான கல்வி வழங்குதலின் முக்கியத்துவம்


பிப்.22,2016. தாய்மொழிகளில் தரமான கல்வி வழங்குதல், ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்கை எட்டுவதற்கு மிகவும் இன்றியமையாதது என்று, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ கூறியது.

பிப்ரவரி 21, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினத்தன்று இவ்வாறு கூறிய யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், உலகில் மக்கள் பயன்படுத்தும் அனைத்து மொழிகளையும் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கல்வியில், பலமொழிகளை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியில், தாய்மொழிகளில் தரமான கல்வி வழங்குதல் மிகவும் முக்கியம் என்றும் பொக்கோவா அவர்கள் கூறினார்.

பங்களா மொழியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்று பங்களாதேஷ் மாணவர்கள் 1952ம் ஆண்டில் நடத்திய போராட்ட நாளே பிப்ரவரி 21 ஆகும். இந்த நாளையே, உலக தாய்மொழி தினமாக, 1999ம் ஆண்டு நவம்பரில் யுனெஸ்கோ பொது அவை அங்கீகரித்தது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.