2016-02-20 14:48:00

கர்தினால் இரஞ்சித்-புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கு


பிப்.20,2016. புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கில் பெண்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மேய்ப்பர்கள், பாதம் கழுவும் சடங்கிற்கு, ஒரு சிறு விசுவாசிகள் குழுவைத் தேர்ந்தெடுக்கலாம், இக்குழுவில், இறைமக்கள் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இச்சிறிய குழு, ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்டிருக்கலாம், இளையோர், வயதானவர், நலமாக இருப்பவர், நோயாளிகள், இருபால் துறவியர் என்று, பலதரப்பட்ட இறைமக்களை இக்குழு கொண்டிருப்பது பொருத்தமானது என்று கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், திருப்பீட திருவழிபாட்டுப் பேராயம், புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கில் மாற்றங்களைக் கொண்டுவரும் விதுமுறைகளை கடந்த சனவரியில் வெளியிட்டது.

இந்த விதிமுறைகள், வருகிற மார்ச் 24ம் தேதி புனித வியாழனன்று நடைமுறைக்கு வருகின்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.