2016-02-19 15:19:00

போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் உரிமை தேவை


பிப்.19,2016. இலங்கையில் 2009ம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு முழு உரிமை வேண்டும் என்று, அந்நாட்டின் வடக்கிலுள்ள தமிழர்கள் விரும்புவதாக, யாழ்ப்பாண மறைமாவட்ட முதன்மைக்குரு பத்திநாதன் ஜோசப்தாஸ் செபரட்னம் அவர்கள் கூறியுள்ளார்.

இது குறித்து UCA செய்தி நிறுவனத்திடம் பேசிய அருள்பணி செபரட்னம் அவர்கள், இனங்கள், மொழிக் குழுக்கள், மதங்கள் ஆகியவற்றிக்கிடையே பதட்டநிலைகளையும் மோதல்களையும் ஊக்குவிக்கும் தீவிரக் கொள்கையுடைய குழுக்கள் மீது அரசு தடை விதிக்க வேண்டுமென்று தமிழர்கள் விரும்புகின்றனர் என்று கூறினார்.

அரசமைப்பு சீர்திருத்தங்களுக்கு, அரசு உருவாக்கியுள்ள பொது மக்கள் பிரதிநிதிகள் குழுவை இவ்வாரத்தில் சந்தித்த அருள்பணி செபரட்னம் அவர்கள், இலங்கையில் பல ஆண்டுகள் இடம்பெற்ற போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு தமிழர்கள் உரிமை கோருகின்றனர் என்று கூறினார்.

போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது குறித்த தடையை 2015ம் ஆண்டில் இலங்கையின் புதிய அரசு ஓரளவு நீக்கியுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.