2016-02-19 14:39:00

குடிபெயர்வோர்க்கு எதிராக சுவர் எழுப்புபவர் கிறிஸ்தவர் அல்ல


பிப்.19,2016. தனது நாட்டில் மக்கள் குடிபெயரவிடாமல் சுவர்கள் எழுப்பும் ஒருவர் கிறிஸ்தவர் அல்ல என்று, மெக்சிகோ நாட்டிலிருந்து திரும்பிய விமானப் பயணத்தில் செய்தியாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், மெக்சிகோவுக்கும் எல்லையில் அமைந்துள்ள தடுப்பு வேலியை, எல்லைப்பகுதி முழுவதும் அமைப்பது பற்றியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் அரசியல்வாதி, மெக்சிகோ மக்களால் பயன்படுத்தப்படுகிறார் என்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் வேட்பாளர் டோனல்டு ட்ரம்ப் அவர்கள் கூறியிருப்பது பற்றி திருத்தந்தையிடம் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

டோனல்டு ட்ரம்ப் அவர்கள் என்ன சொன்னார் என்பது எனக்குச் சரியாகத் தெரியாது, ஆனால், பாலங்களைக் கட்டாமல், சுவர்களை மட்டும் கட்டுவதற்கு நினைக்கும் மனிதர் எங்கிருந்தாலும் அவர் கிறிஸ்தவர் அல்ல என்றும் கூறினார் திருத்தந்தை.

மெக்சிகோ நாட்டில் தனது 12வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய விமானப் பயணத்தில், அந்நாட்டில் காணாமல்போனவர்கள், உக்ரேய்ன் திருஅவை, அமெரிக்க ஐக்கிய நாடு, சீக்கா(Zika) நோய்க் கிருமி பரவல், பாலியல் தவறிழைக்கும் அருள்பணியாளர்கள், குடிபெயர்வோர் உட்பட பல்வேறு தலைப்புகளில், பன்னாட்டுச் செய்தியாளர்கள் திருத்தந்தையிடம் கேள்விகளை முன்வைத்தனர்.

மெக்சிகோவின் Guerrero மாநிலத்தில் 2014ம் ஆண்டிலிருந்து காணாமல்போயுள்ள 43 மெக்சிகோ ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் உறவினர்களைச் சந்திக்காதது குறித்து கேட்டபோது, இவர்களைச் சந்திப்பதற்கு விரும்பினேன், ஆனால், நாட்டில் காணாமல்போயுள்ளவர் அமைப்புகள் பல உள்ளன, அக்குழுக்களுக்குள்ளே பிரச்சனைகள் உள்ளன என்று கூறினார் திருத்தந்தை.

அதோடு, இத்திருத்தூதுப் பயணத்தில், குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களால் நடத்தப்படும் கொலைகள் குறித்த பிரச்சனைகள் பற்றி தான் அதிகமாகப் பேசியுள்ளதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருத்தூதுப் பயணத்தின் ஆரம்பத்தில், ஹவானாவில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்களைச் சந்தித்தது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கும் பதில் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகில், குறிப்பாக, இலத்தீன் அமெரிக்காவில், குழந்தை பிறப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் சீக்கா நோய்க் கிருமி பரவுவது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ், கருக்கலைப்பு குற்றமாகும், இதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, இது மருத்துவர்கள் எடுத்திருக்கும் வாக்குறுதிக்கு எதிராகச் செல்வது, ஆனால், இக்கட்டான சூழல்களில் கர்ப்பமாவதைத் தவிர்ப்பதற்கு கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளலாம், அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் அருள்சகோதரிகள் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது, அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் ஆப்ரிக்க அருள்சகோதரிகளுக்கு அனுமதியளித்திருந்ததையும் நினைவுபடுத்தினார்.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மெக்சிகோ திருத்தூதுப் பயணம், இம்மாதம் 12 முதல் 17 வரை இடம்பெற்றது. 18ம் தேதி மாலையில் வத்திக்கான் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.