2016-02-19 15:24:00

எருசலேம் மறைமாவட்டத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்


பிப்.19,2016. புனித பூமியிலும், மத்திய கிழக்கிலும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு உண்மையான விருப்பம் காணப்படவில்லை, அப்பகுதிகளில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது என்று, எருசலேம் முதுபெரும் தந்தையின் துணை ஆயர் கூறினார்.

இஸ்ரேலில் சில நகராட்சிகள் திருஅவையின் சொத்துக்களைத் தாக்கியிருப்பது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, ஆயர் Giacinto-Boulos Marcuzzo அவர்கள், புனித பூமியிலும், மத்திய கிழக்கிலும் ஒவ்வொரு நாளும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன, ஆனால் அமைதிக்கான உரையாடலைத் தொடங்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

ஆலயங்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவு சபைகளின் வங்கிக் கணக்குகளை சில நகராட்சிகள் முடக்கியிருப்பதாக அண்மையில் கேள்விப்பட்டோம், நாங்கள் ஆற்றும் பணிகளைத் தவிர, வரிகளை ஒழுங்காகச் செலுத்துகிறோம், ஆனால் அரசு அதிகப்படியான நிர்வாக வரி கட்ட வேண்டுமென்று மறைமாவட்டத்தை வற்புறுத்துகின்றது என்று கூறினார் ஆயர் Marcuzzo.

தனது சொந்த வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது, அரசு நேரிடையாக அதிலிருந்து வரிகளை எடுத்துக்கொள்கின்றது என்று கூறினார் எருசலேம் துணை ஆயர் Marcuzzo.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.