2016-02-19 14:46:00

இது இரக்கத்தின் காலம் : புகழுக்காக ஆற்றப்படுவது, தியாகமாகாது


ஜென் குரு ஒருவர், ஊர் ஊராகச் சென்று போதனை செய்வார். மக்கள் தருகிற உணவைச் சாப்பிடுவார். என்றைக்காவது சாப்பிட ஏதும் கிடைக்காவிட்டால் பட்டினியாகப் படுத்துவிடுவார்.

ஒருநாள், பெரிய பணக்காரர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். ‘ஐயா, உங்களைப் போன்ற பெரிய ஞானி, ஏன் இவ்விதம் ஒரு நாடோடியைப் போல் அலையவேண்டும்? உங்களுக்கு நான் ஒரு பிரமாதமான ஆசிரமம் அமைத்துத் தருகிறேன். நீங்கள் அங்கேயே தங்கியிருந்து உங்களுடைய தியானங்களைத் தொடரலாம். உங்கள் புகழ் எங்கும் பரவும். நாடெங்கிலுமிருந்து மக்கள் உங்களைத் தேடி வந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். என்ன சொல்கிறீர்கள்?’ என்றார்.

ஜென் குரு சிரித்துக் கொண்டே, ‘அது எனக்குச் சரிப்படாது. மன்னித்துவிடுங்கள்.  உங்கள் எண்ணத்தில் தவறில்லை. ஆனால், மற்றவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு என்னைத் தேடி வரவேண்டும் என்பதல்ல, மாறாக, அவர்கள் இருக்குமிடம் நாடிச் செல்வதே என் இயல்பு. சுயத்தை இழந்து புகழ் பரப்புவதால் யாருக்கு என்ன இலாபம்?  பணம், புகழ், பதவி, மரியாதை போன்ற விடயங்கள், கத்தியை நக்கித் தேன் குடிப்பதுபோல ஆபத்தானது. அந்த ருசிக்கு ஆசைப்பட்டால், நாக்கு போய்விடும்! எனக்கு ஆற்றில் ஏந்திக் குடிக்கிற பச்சைத் தண்ணீர் போதும்’ என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.