2016-02-18 15:51:00

ஹூவாரெஸ் நகரில் தொழிலாளர் சந்திப்பு, திருப்பலி


பிப்.18,2016. மெக்சிகோவின் Chihuahua மாநிலத்தின் Bachilleres கல்வி நிலையத்தில் ஏறக்குறைய மூவாயிரம், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒரு குடும்பத்தின் தாய், தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் மேடையில் சாட்சி கூறினார். அதற்குப் பின்னர் தொழிற்சங்கத் தலைவர் ஒருவரும் பேசினார். தொழிலாளர் சந்திப்புக்குப் பின்னர், ஹூவாரெஸ் நகர் பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் உள்ளூர் நேரம் நாலை 3.15 மணிக்கு, ஒன்பது கிலோ மீட்டர் திறந்த காரில் சென்று, அந்நகரின் Fieristica பகுதிக்குச் சென்றார் திருத்தந்தை. அந்த அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்குச் செல்வதற்கு முன்னர், ரியோ கிராந்தே பாலத்தின் அடுத்த முனையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைப் பகுதியிலுள்ள எல் பாசோவில் திருத்தந்தையைப் பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருந்த முப்பதாயிரம் மக்களை, அப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான சிலுவையின் அருகில் நின்று ஆசிர்வதித்தார் திருத்தந்தை. அமெரிக்கா செல்ல முயற்சிக்கும் குடிபெயர்வோரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இவர்களின் நினைவாக, இச்சிலுவை எழுப்பப்பட்டுள்ளது. டெக்சஸ் மாநிலத்தின் எல் பாசோ நகர் கால்பந்து அரங்கத்தில், திருத்தந்தையின் திருப்பலியை திரையில் காண்பதற்காக இம்மக்கள் கூடியிருந்தனர். இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் செல்லும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், மெக்சிகோவுக்குமான எல்லையில் அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி இடத்தில் சிறிதுநேரம் நின்று செபித்தார் திருத்தந்தை. பின்னர் திறந்த காரில் ஏறி திருப்பலி நிறைவேற்றும் அரங்கத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர்.

இத்திருப்பலிக்குப் பின்னர், மெக்சிகோ மக்களின் உபசரிப்புக்கு நன்றி தெரிவித்து சிறிய உரையாற்றினார் திருத்தந்தை. இருளான நேரங்களில்கூட நம்பிக்கையின் ஒளிகள் தெரிகின்றன என்று கூறினார். அனைவரையும் ஆசிர்வதித்து நன்றி நிறைந்த உள்ளத்துடன் ஹூவாரெஸ் நகர் விமான நிலையம் சென்று உரோமைக்குப் புறப்பட்டார்

திருத்தந்தை பிரான்சிஸ். மெக்சிகோ அரசுத்தலைவர், அவரின் மனைவி உட்பட பல தலைவர்கள் திருத்தந்தையை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இத்துடன் திருத்தந்தையின் ஆறுநாள் கொண்ட மெக்சிகோ நாட்டுக்கான திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்ற ஒவ்வொருவரையும் இயேசுவின் இரக்கம் அரவணைக்கின்றது. உங்கள் இதயங்களைத் திறங்கள், மெக்சிகோ மற்றும் எல்லா மெக்சிகோ மக்களுக்கும் எனது நன்றி, ஆண்டவரும், குவாதலூப்பே அன்னைமரியாவும் உங்களோடு எப்போதும் உடன்வருவார்களாக என்ற டுவிட்டர் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பியுள்ளார். ஒன்பது மொழிகளில் பிரசுரிக்கப்படும் திருத்தந்தையின் @Pontifex டுவிட்டரைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 70 இலட்சத்திற்கும் அதிகமாகியுள்ளது.   மெக்சிகோ மக்களையும், நம்மையும் குவாதலூப்பே அன்னைமரியிடம் அர்ப்பணிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.