2016-02-18 15:44:00

ஹூவாரெஸ் நகரில் சிறைக் கைதிகள் சந்திப்பு


பிப்.18,2016. பிப்ரவரி 17, இப்புதன் மெக்சிகோவில் இத்திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இந்நாள் காலை 7.30 மணிக்கு, மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்தில் உள்ளவர்களுக்கு நன்றி கூறி, ஹூவாரெஸ் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இஸ்பானிய நாடுகாண் பயணிகளால் 1659ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஹூவாரெஸ் நகருக்கு, வடக்கிற்குச் செல்லுதல் என்று பொருள்படும் “El Paso del Norte” என்ற பெயரே 1886ம் ஆண்டுவரை நிலவியது. இந்நகரின் வடக்கில் அமைந்துள்ள ரியோ கிராந்தே நதி, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிகோவின் எல்லையில் ஓடுகின்றது. இந்த நதியின் மீது அமைந்துள்ள பாலம், மெக்சிகோ நாட்டையும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் மாநிலத்தின் எல் பாசோ நகரையும் இணைக்கின்றது. இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழை குடிபெயர்வோர், இந்தப் பாலத்தின் வழியே, அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் செல்கின்றனர்.

குடிபெயர்வோர் பிரச்சனையை அதிகம் சந்திக்கும் ஹூவாரெஸ் நகரின் CERESO எண் 3 என்ற சிறைச்சாலைக்கு உள்ளூர் நேரம் 10.30 மணிக்குச் சென்றார் திருத்தந்தை. Chihuahua மாநிலத்தில் ஹூவாரெஸ் நகரிலுள்ள இச்சிறை, பன்னாட்டு சிறை விதிகளின்படி இயங்குகிறது. இங்குள்ள 3,600 கைதிகளில் ஏறக்குறைய 700 பேர், சிறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திருத்தந்தையின் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நீலநிற சீருடையில் இருந்த இக்கைதிகளில் ஐம்பது பேர், ஒவ்வொருவராக மேடைக்கு வந்து திருத்தந்தையை முத்தமிட்டு, ஆசிர்பெற்றுச் சென்றனர். கடைசியில் வந்த கைதி, தான் செய்த ஓர் அழகான மரச்சிலுவையை திருத்தந்தையிடம் கொடுத்தார். திருத்தந்தையும் பரிசுப்பொருளைக் கைதிகளுக்கு வழங்கினார். கைதிகள் இசைத்த இனிமையான பாடலுக்குப் பின்னர், ஒரு கைதி வழங்கிய சாட்சியத்திற்கும் செவிமடுத்தார் திருத்தந்தை. இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் உங்களைச் சந்தித்து உங்களோடு யூபிலியைச் சிறப்பிக்காமல் என்னால் இந்நாட்டைவிட்டுச் செல்ல முடியாது என்று தனது உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நீங்கள் செய்தது செய்ததுதான். கடந்த காலத்தை உங்களால் மாற்ற இயலாது, நீங்கள் நரகத்தை அனுபவித்திருக்கலாம், ஆயினும், இறைவாக்கினர்களாக, உங்கள் வாழ்வை நீங்கள் மீண்டும் அமைக்க முடியும், இறைவனின் இரக்கம் உங்களைத் தழுவிக் கொள்ளக் காத்திருக்கின்றது என்று கைதிகளிடம் கூறி அவர்களை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை. கைதிகளை ஆசிர்வதித்த பின்னர், ஒன்பது கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், Chihuahua மாநிலத்தின் Bachilleres கல்வி நிலையத்தில் ஏறக்குறைய மூவாயிரம், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.