2016-02-18 15:32:00

மெக்சிகோவில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயண நிறைவு


பிப்.18,2016. அன்பு நெஞ்சங்களே, பிப்ரவரி 12, கடந்த வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து காரில் புறப்பட்ட  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் சென்று தனது 12வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார். மெக்சிகோ நாட்டுக்கான இத்திருத்தூதுப் பயணத் திட்டத்தில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்களைச் சந்திப்பதற்காக, முதலில் கியூபத் தலைநகர் ஹவானா, பன்னாட்டு விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. அங்கு மூன்று மணி நேரம் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சந்திப்பை முடித்து, மெக்சிகோ நாட்டுத் தலைநகர் மெக்சிகோ நகர் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மெக்சிகோ நாட்டில் ஆறு நாள்கள் மேற்கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தை, இப்புதன் இரவு ஏழு மணியளவில் நிறைவு செய்து, மெக்சிகோ விமானத்தில் உரோம் நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, ஐஸ்லாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு, தனது செபமும், வாழ்த்தும் நிறைந்த தந்திகளையும் அனுப்பினார். இந்த 12 மணி நேர நீண்ட விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் செய்த 76க்கும் மேற்பட்ட பல நாடுகளின் செய்தியாளர்களுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை. இவ்வியாழன் மாலை 3.15 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்துசேர்ந்த திருத்தந்தை, வத்திக்கானுக்கு வந்த வழியில், மேரி மேஜர் பசிலிக்காவில் இறங்கி அன்னைமரியாவுக்கு நன்றி மலர்க்கொத்தைச் சமர்ப்பித்துச் செபித்தார்.

13 விழுக்காட்டு பூர்வீக இனத்தவரைக் கொண்ட மெக்சிகோ நாட்டில், உரிமை மறுக்கப்பட்ட ஏழைகள், கைதிகள், சிறார், இளையோர், நோயாளர், வயதானவர்கள், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஆயர்கள், துறவிகள் என பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்பணியாளர்கள், சமுதாயத்தின் இளவரசர்கள் போன்று வாழாமல், ஆண்டவர் இயேசுவுக்குச் சாட்சிகளாக வாழுமாறு கேட்டுக்கொண்டார். துறவிகள், பூட்டிய அறைகளுக்குள் முடங்கிக் கிடக்காமல், பலவிதங்களில் துன்புறும் மக்கள் மத்தியில் சென்று பணியாற்ற அழைப்பு விடுத்தார். வன்முறை, ஏழ்மை, திட்டமிட்டக் குற்றக் கும்பல் போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்கு, தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறும் மக்களைத் திறந்த இதயத்துடன் ஏற்குமாறு அரசியல் தலைவர்களையும், மற்ற மக்களையும் கேட்டுக்கொண்டார். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் டோனல்டு ட்ரம்ப் அவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றால், அந்நாட்டில் சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ள ஏறக்குறைய ஒரு கோடியே பத்து இலட்சம் பேரை வெளியேற்றுவதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பர்களே, மெக்சிகோவுக்கான இத்திருத்தூதுப் பயணம் நிறைவடைந்திருக்கும் இச்சூழலில், அம்மக்கள் இப்போது எத்தகைய காற்றைச் சுவாசிக்கின்றனர்? ஊழலும், வன்முறையும், பாதுகாப்பற்றதன்மையும், சந்தேகமும் நிறைந்த காற்றையா? அல்லது புதுப்பித்தல் மற்றும் மாற்றத்திற்கான காற்றையா? மரணங்களும், சுரண்டல்களும் இனிமேல் ஒருபோதும் வேண்டாம், மானமாற்றத்திற்கு வழியும், காலமும் இருக்கின்றன, இறைவனின் இரக்கத்தை இறைஞ்சுவதற்கு காலம் இருக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்தின் கடைசி நாளில் கூறியது மெக்சிகோ மக்கள் வாழ்வில் உயிரூட்டம் பெறும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.