2016-02-18 15:29:00

திருத்தந்தை : எத்தகைய உலகை விட்டுச் செல்லப் போகிறோம்?


பிப்.18,2016. உழைப்பாளர் உலகோடு இந்த நகருக்கு இருக்கும் நெருங்கிய உறவை மனதில் கொண்டே உங்களை இங்கு சந்திக்க விரும்பினேன். உங்களின் மகிழ்வையும் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளியிட்ட சாட்சிய உரைகளுக்கு செவிமடுக்க எனக்களிக்கப்பட்ட இந்த வாய்ப்புக்கு நன்றி கூறுகிறேன். உரையாடல் வழியேதான் நாளைய உலகை கட்டியெழுப்ப முடியும் என்பதால், அதற்கான வாய்ப்புகளை நாம் தவற விடுதல் இயலாது. இன்றைய தொழில் உலகம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், வேலைக்கும் கல்விக்கும் வாய்ப்புகள் இல்லாதபோது, வருமானத்திற்காக மக்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் சிக்கி, வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர். இத்தகைய ஒரு நிலை உருவாக நாம் அனுமதிக்க முடியாது. தனி மனித உறவுகளுக்குக்கூட பொருளாதார பயன்பாடே முக்கியக் காரணியாக இருந்து, இலாபமே அனத்திலும் முக்கியமானதாகத் தெரிகின்றது. இதனால், தொழிலின் ஒழுக்க ரீதிக் கூறுகள் இழக்கப்படுகின்றன. இலாபமே முக்கியமாகிப் போனதால், தொழிலாளர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழப்பதுடன், சுரண்டவும் படுகின்றனர். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, தூக்கியெறியும் ஒரு பொருளாக நடத்தப்படுகின்றனர். இன்றைய அடிமை நிலைகளுக்கு நாம் ஒரு நாள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இத்தகைய நிலைகள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதிச் செய்யவேண்டும். தொழில் நிறுவனங்கள் பிறரன்பு நிறுவனங்களாக மாறவேண்டும் என்பது திருஅவையின் சமூகப் படிப்பினைகளின் நோக்கமல்ல, மாறாக, மனிதனின் மாண்பும் சமூக அமப்புமுறைகளும் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பதை அது மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது. பேராசை எனும் போதை தரும் கடலில் மனித மாண்புகள் இழக்கப்படக் கூடாது என்பதில், திருஅவைப் படிப்பினைகள்  உறுதியாக நிற்கின்றன. தொழில் என்பது அனைவரின் நல்ல வருங்கலத்திற்குமானது என்பதை மனதில் கொண்டு, அனைவரின் பங்கேற்பையும் ஊக்குவித்து, அதனை மனிதபிமானமுடையதாக மாற்றுவோம். எத்தகைய ஓர் உலகை நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லப் போகிறோம் என்பது குறித்து சிந்திப்போம். சுரண்டல், போதிய ஊதியமற்ற வேலை, பணியிடக் கொடுமைகள் போன்றவற்றைக் கொண்ட ஒரு மெக்சிகோ நாட்டையா, அல்லது, மாண்புடன் கூடிய வேலை, தங்குவதற்கு வீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கொண்ட நாட்டையா, என சிந்திப்போம். ஊழலும், வன்முறையும், பாதுகாப்பற்ற நிலைகளும், சந்தேகங்களும் நிரம்பிய காற்றையா, நம் வருங்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லப்போகிறோம்? 

உடன்பாடுகள் காண்பது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும், மேலும் தீமைகளை விதைத்துச் செல்வது அதைவிடக் கொடுமையானது. மனிதனைவிட உயர்ந்தவைகள் அல்ல, முதலீடுகளும் இலாபமும். பொது நலனுக்குப் பயன்படுபவைகளாக அவை இருக்க வேண்டும்.  நம் குழந்தைகளுக்கு ஏற்ற ஓர் உலகை கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள். இப்பாதையில் நம் குவாதாலூப்பே அன்னைமரியா உதவி புரிவாராக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.