2016-02-17 15:21:00

ஹோசே மரியா மொரேலியா அரங்கத்தில் இளையோர் சந்திப்பு


பிப்.17,2016. இச்செவ்வாய் மாலையில், மொரேலியா பேராலயத்தில் சிறாரைச் சந்தித்த பின்னர், திறந்த காரிலே 21 கிலோ மீட்டர் தூரம் சென்று, அந்நகரின் ‘José Maria Morelos y Pavòn’ அரங்கம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் கூடியிருந்தனர். இளையோர் என்றால் ஆடல், பாடல்களுக்குக் குறைவே இருக்காது. திருத்தந்தை அங்குச் சென்றபோது, அவர் சென்ற திறந்த கார், பந்து வண்டிபோல் காணப்பட்டது. இளையோர் அளித்த பந்துகளும், விளையாட்டுச்  சட்டைகளும் அந்த அளவுக்கு காரை நிறைத்திருந்தன. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல வண்ணங்களில் Michoacán மாநில மரபு ஆடைகளை அணிந்திருந்த இரு இளையோர் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். திருத்தந்தையின் நம்பிக்கை வார்த்தைகள் தேவை என்றனர் இளையோர். அந்நாட்டின் முப்பது இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் அமைதியில் வாழ விரும்புகின்றனர், அமைதி மற்றும் ஒப்புரவின் தூதுவராக திருத்தந்தை மெக்சிகோவுக்கு வந்திருப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஆல்பெர்த்தோ என்ற இளைஞர், திருத்தந்தையிடம் கூறினார். அந்நாட்டின் வேலைவாய்ப்பின்மை, ஊழல், போதைப்பொருள் வர்த்தகம், வன்முறைக்குப் பலியாகுபவர் எண்ணிக்கை அதிகரிப்பு, கடத்தல், கொலை, போன்ற பல பிரச்சனைகளை ஓர் இளைஞர் திருத்தந்தையிடம் கூறினார். இந்த இளையோர் சந்திப்பு ஒரு பகிர்வு நிகழ்வு போல் அமைந்திருந்தது. திருத்தந்தையும் இளையோர்க்கென தயாரித்திருந்த உரையோடு அந்த நேரத்தில் தன் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

மெக்சிகோ இளையோர், தங்களின் எதிர்காலக் கனவுகளில் நம்பிக்கை வைக்க வேண்டும், மெக்சிகோவின் நம்பிக்கையும் சொத்தும் இளையோரே என்று கூறினார் திருத்தந்தை. இச்சந்திப்பை முடித்து, அந்த அரங்கத்தின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்த சிறாரை வாழ்த்துவதற்காக, திருத்தந்தை சென்றார். அப்போது ஒருவருக்குத் தனது பாகெட்டிலிருந்து செபமாலையை எடுத்துக் கொடுப்பதற்காக, தனது கையை இட்டு செபமாலையை வெளியே எடுத்தபோது, அக்கூட்டத்திலிருந்த ஓர் இளைஞர், திருத்தந்தையின் கையைத் தொடுவதற்காக, தனது இரு கைகளாலும் பலமாக திருத்தந்தையின் உடுப்பை இழுத்தார். அதில் திருத்தந்தை தடுமாறி, அருகில் சக்கர நாற்காலியிலிருந்து சிறுமியின் மீது விழுவது போலானார். பின்னர் நிமிர்ந்த திருத்தந்தை, தன்னை இழுத்த இளைஞரிடம், தன்னலமாக இருக்காதே என்று இருமுறை இஸ்பானியத்தில் கொஞ்சம் கோபமாகவே கூறினார். கூட்டத்தினரைச் சந்திக்கும்போது திருத்தந்தை கொஞ்சம் கடுமையாகக் கூறியது இதுவே முதன்முறையாகும்.  

மொரேலியாவிலிருந்து மீண்டும் மெக்சிகோ நகருக்கு விமானத்தில் சென்றார் திருத்தந்தை. மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இச்செவ்வாய் தின பயண நிகழ்வுகள் நிறைவடைந்தன. இப்புதன் காலையில் மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்தில் உள்ளவர்களுக்கு நன்றி கூறி, Ciudad Juarez நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நகரின் சிறைக்குச் சென்று கைதிகளைச் சந்திப்பது, அந்நகரில் தொழிலாளரைச் சந்திப்பது, திருப்பலி ஆகிய மூன்று நிகழ்வுகளை நிறைவு செய்து, இப்புதன் உள்ளூர் நேரம் இரவு 7.15 மணிக்கு உரோம் நகருக்குப் புறப்படுவது பயணத்திட்டத்தில் உள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் மாலை 3.15 மணியளவில் உரோம் வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.