2016-02-17 15:14:00

மொரேலியா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.17,2016. இச்செவ்வாய் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் திறந்த காரில் மொரேலியா பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1744ம் ஆண்டில் கட்டப்பட்ட இப்பேராலயம், பாரூக் கட்டட கலையுடன், இரு கோபுரங்களைக் கொண்டு, இளஞ்சிவப்புக் கற்களால் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மொரேலியா மேயர், அப்பேராலயத்தின் முன்னர், திருத்தந்தைக்கு, நகரின் சாவியை வழங்கினார். அப்பேராலயத் திருப்பூட்டறையில், பல்கலைக்கழக அதிபர்கள் மற்றும் கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளை, ஒவ்வொருவராக கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை. அதன் பின்னர் பேராலயத்திற்கு வந்தார் திருத்தந்தை. அங்கு பலவண்ண ஆடைகளில் அமர்ந்திருந்த சிறார் கூட்டம், திருத்தந்தையைக் கண்டவுடன் சப்தமாக ஒலி எழுப்பியது. முன்வரிசையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சிறார், மஞ்சள் நிறத்தில் ஆடைகளை உடுத்தியிருந்தனர். முதலில் இரு சிறார் மலர்க் கொத்துக்களை, திருத்தந்தைக்குக் கொடுத்தனர். அவற்றில் ஒன்றை, அன்னை மரியா திருவுருவப் பாதத்திலும், மற்றொன்றை, அப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அருளாளர் José Sanchez Del Rio திருவுருவத்திலும் வைத்தார். பின்னர் ஒலிவாங்கியை வாங்கி, தானே பிடித்துக்கொண்டு சிறாரிடம் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சிறார், முதல்முறையாக திருநற்கருணை வாங்குவதற்குத் தங்களைத் தயாரிப்பவர்கள்.  

தங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிகள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களைக் கவனிப்பவர்களுக்காகச் செபிக்குமாறு இச்சிறாரிடம் கூறினார் திருத்தந்தை. பின்னர் ஆசிர் அளித்த பின்னர் தனக்காகவும் செபிக்குமாறு கூறினார் திருத்தந்தை. தனக்காகச் செபிப்பீர்களா என்று திருத்தந்தை சிறாரிடம் கேட்டபோது, எல்லாரும் ஒரே குரலில் செபிக்கிறோம் என்று கூறினர். பின்னர் அப்பேராலயத்தின் நடுப்பகுதி வழியாகச் சென்ற திருத்தந்தை, சில சிறுவர்கள், சிறுமிகளிடம் தனித்தனியே பேசினார். ஏழு வயது சிறுமி Lupitaவிடமும்  நின்று பேசினார் திருத்தந்தை. இச்சிறுமி, மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, கடும் நோயால் இறந்துகொண்டிருந்தார். அச்சமயத்தில், அருளாளர் José Sanchez Del Rio அவர்களின் பரிந்துரையால் அற்புதமாக குணமடைந்தார் Lupita. மெக்சிகோ நாட்டில் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில், திருஅவையைப் பாதுகாக்கும், ‘Cristero’ இயக்கத்தில் சேர்ந்திருந்தவர் 14 வயது José Sanchez Del Rio. இச்சிறுவன், கத்தோலிக்க விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததால், 1928ம் ஆண்டில், அரசு அதிகாரிகளால் கொல்லப்பட்டார். இச்சிறுவன், 2004ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் மறைசாட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2005ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி மெக்சிகோவில் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட்டார். இவரின் பரிந்துரையால் இடம்பெற்ற புதுமையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் வழியாக 14 வயது முத்திப்பேறு பெற்ற José Sanchez Del Rio, இவ்வாண்டில் புனிதராக அறிவிக்கப்படவுள்ளார். மேலும், “நாம் நடப்பதற்கும், பேசுவதற்கும், செவிசாய்ப்பதற்கும் கற்றுக்கொள்வது போன்று, செபிப்பது எப்படி எனக் கற்றுக்கொள்வோம். எப்படி செபிக்கின்றீர்கள் என்று நீங்கள் எனக்குச் சொன்னால், நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள் என்று என்னால் சொல்ல முடியும்” என்ற டுவிட்டர் செய்தியை, இச்செவ்வாயன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.