2016-02-17 12:00:00

துறவியருக்கும், குருக்களுக்கும் திருத்தந்தை வழங்கிய மறையுரை


பிப்.17,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, புகழ்பெற்ற கூற்று ஒன்று உண்டு. "நீ எவ்விதம் செபிக்கிறாய் என்று சொல், நீ எவ்விதம் வாழ்கிறாய் என்று நான் சொல்வேன்; நீ எவ்விதம் வாழ்கிறாய் என்று சொல், நீ எவ்விதம் செபிக்கிறாய் என்று நான் சொல்வேன்" என்பதே அந்தக் கூற்று. நாம் நடப்பதற்கு, பேசுவதற்கு, கேட்பதற்கு கற்றுக் கொள்வதைப் போலவே, செபிப்பதற்கும் நாம் கற்றுக்கொள்கிறோம். செபம், வாழ்க்கையைச் சொல்லித்தரும் கல்விக்கூடம்; வாழ்க்கை, செபத்தைச் சொல்லித்தரும் கல்விக்கூடம்.

இயேசு தன் சீடர்களுக்கு, வாழ்வின் மறையுண்மையை, அவரது வாழ்வின் மறையுண்மையை அறிமுகப்படுத்த விழைந்தார். அவர்களோடு உண்டு, உறங்கி, செபித்து, போதித்து, இறைவனின் மகனாக இருப்பதன் பொருள் என்ன என்பதை, அவர்கள் உணரச் செய்தார். "நம் தந்தை" என்ற சொற்களின் ஆழத்தை அவர்கள் உணரச் செய்தார்.

தன் வாழ்வைப் பகிர்வதற்கு, தன் வழியே, தந்தையைத் தொடுவதற்கு அவர்களை அழைத்தார்.

இதே அழைப்பை இயேசு நமக்கும் விடுக்கிறார். "நம் தந்தை" என்ற சொற்களைச் சொல்வதற்கு, நாம் முதன் முதலில் அழைக்கப்படுகிறோம். தன் தெய்வீக வாழ்வில் பங்கேற்க அவர் நம்மை அழைக்கிறார். நாம் கண்டு, கேட்டு, உணர்ந்த இந்த வாழ்வுக்கு நாம் சான்று பகரவில்லை என்றால், நமக்கு ஐயோ கேடு.

நாம், "இறைமையை மேற்பார்வையிடும் மேலாளர்கள்" அல்ல; இறைவனால் வேலைக்குச் சேர்க்கப்பட்ட பணியாளர்கள் அல்ல; அவரது வாழ்வில் பங்கேற்று, அவரை 'நம் தந்தை' என்று சொல்வதற்காக அழைக்கப்பட்டுள்ளோம்.

நம் தந்தையாக விளங்கும் இவரிடம், நம்மைச் சோதனைக்கு இட்டுச் செல்லவேண்டாம் என்று செபிக்கிறோம். சோதனைக்கு இட்டுச் செல்லவேண்டாம் என்று, தன் அன்றைய சீடர்களுக்காகவும், இன்றையச் சீடர்களுக்காகவும் இயேசு செபிக்கிறார்.

நமக்கு வரக்கூடிய சோதனைகள் என்ன? நாம் விழக்கூடிய பாவங்கள் என்ன? வன்முறை, ஊழல், போதைப்பொருள் வர்த்தகம், மனிதரைத் துச்சமாக மதிக்கும் போக்கு, துன்பத்தைக் கண்டும் அக்கறையற்ற மனநிலை என்று, பல திசைகளிலிருந்து நமக்கு வரும் சோதனைகள் யாவை? இப்பிரச்சனைகள் நிரந்தரமாகிவிட்டதைப் போல் தெரியும்போது வரும் சோதனைகள் யாவை?

இத்தகையச் சூழலில், சாத்தானுக்குப் பிடித்த ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறான். அதுதான், மனம் தளர்ந்துபோய், பிரச்சனைகள் முன் சரணடைதல். இப்படி சரணடையும்போது, நாம் செயலற்று போகிறோம். நம் தவறான பாதுகாப்பு வளையங்களுக்குள், நமது 'கோவில் அறைகளுக்குள்' அடைபட்டுப் போகிறோம்.

இப்படி சரணடைவதால், கடந்த காலத்தை நன்றியோடு பார்க்கவும், எதிர்காலத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் தயங்குகிறோம். "எம் தந்தையே, இந்தச் சோதனைக்குள் எம்மை நடத்திச் செல்லாதேயும்."

நாம் தற்போது இருக்கும் நிலை, நாம் உருவாக்கியது அல்ல, நம்மோடு முடிவடைவதும் அல்ல. நாம் கடந்த காலத்தை நினைவில் கொள்ளும்போது, மிச்சோக்கன் (Michoacán) ஆயரான, Vasco Vázquez de Quiroga அவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். அவர் இஸ்பானிய நாட்டில் பிறந்தவர் என்றாலும், இந்நாட்டிற்கு வந்து, இந்நாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததை எண்ணிப் பார்க்கவேண்டும்.

சொந்த வீடுகள் இன்றி, சந்தைகளில் அவமானத்திற்கு உள்ளாகி, விற்கப்பட்ட புர்ஹெபெசாஸ் (Purhépechas) இந்தியர்களுக்காக உழைத்தவர், ஆயர் Quiroga அவர்கள். 'புர்ஹெபெசாஸ்' என்றால், தந்தை அல்லது அப்பா என்று பொருள்.

இறைவனை 'அப்பா' என்று அழைப்பதற்கு, இயேசு தன் செபத்தின் வழியே சொல்லித் தந்தார். அப்பா, தீமையைக் கண்டு சரணடையும் சோதனைக்குள் எம்மை அழைத்துச் செல்லாதேயும். கடந்த கால நினைவுகளையும், 'எம் தந்தையே' என்று எங்களுக்குச் செபிக்கக் கற்றுத்தந்த எமது முன்னோரையும் மறந்துவிடும் சோதனைக்குள் எம்மை அழைத்துச் செல்லாதேயும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.