2016-02-16 15:07:00

சான் கிறிஸ்டோபல் பேராலயத்தில் திருத்தந்தை


பிப்.16,2016. இத்திங்கள் உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு San Cristóbal de las Casas பேராலயம் சென்று, வயதானவர்கள், நோயாளிகள் ஆகியோரை அரவணைத்து முத்தமிட்டு அவர்கள் கொடுத்த சிறு சிறு பரிசுகளையும், விண்ணப்பக் கடிதங்களையும் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்பேராலயத்திலுள்ள ஆயர் சாமுவேல் ரூயிஸ் அவர்களின் கல்லறையிலும், பின்னர் மக்கள் எல்லாருடனும் இணைந்து அன்னைமரியிடம் செபித்து, மலர்க் கொத்து ஒன்றையும் அன்னைமரியின் திருப்பாதத்தடியில் வைத்தார் திருத்தந்தை. இப்பேராலயத்திற்கு திருப்பலி பாத்திரம் மற்றும் திருப்பலி ஆடையையும் பரிசாக அளித்தார். ஷியாப்பாஸ் மாநிலத்தில் நாற்பது ஆண்டுகளாக ஏழைப் பழங்குடி மக்களுக்கு மறைப்பணியாற்றி, அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் ஆயர் ரூயிஸ். 2011ம் ஆண்டில் இறந்த ஆயர் ரூயிஸ் அவர்கள், பழங்குடி மக்களின் கலாச்சார மரபுகளை திருவழிபாடுகளில் இணைத்தவர். இதனால் இவர், மெக்சிகோ திருஅவையின், ஏன் வத்திக்கானின் எதிர்ப்பையும்கூட சில நேரங்களில் சந்தித்தார். சான் கிறிஸ்டோபல் நகர் பேராலயத்திலிருந்து மீண்டும் திறந்த காரில் நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று, ஹெலிகாப்டரில் ஏறி, Tuxtla Gutiérrez நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.