2016-02-15 15:27:00

மெக்சிகோ நகர் பெதரிக்கோ கோம்ஸ் சிறார் மருத்துவமனை சந்திப்பு


பிப்.15,2016. இஞ்ஞாயிறு மாலை 4.35 மணியளவில் எக்காத்தெபெக் குருத்துவக் கல்லூரியிலிருந்து மெக்சிகோ நகர், மார்த்தே இராணுவ விமானத்தளத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து 6.5 கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் அந்நகரின் பெதரிக்கோ கோம்ஸ் சிறார் மருத்துவமனைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். சிறார் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் போல் செயல்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒரு சிறுவனுக்கு, ஒரு சொட்டு மருந்தை வாயில் இட்டார். சக்கர நாற்காலியிலிருந்த ஒரு சிறுமி, தனது கையால் தயாரித்த வாலன்டைன் தின வாழ்த்து அட்டையைக் கொடுத்தார். இது நீங்கள் தயாரித்ததா என்று அச்சிறுமியிடம் கேட்டு,  நன்றி என்று பெற்றுக்கொண்டார் திருத்தந்தை. பல சிறாரைக் குனிந்து முத்தமிட்டார் திருத்தந்தை. செபமாலை வேண்டுமா என்று கேட்டு சிறார் கழுத்தில் செபமாலைகளைப் போட்டார் திருத்தந்தை. சிறாரும் சக்கர நாற்காலியிலிருந்து கொண்டு திருத்தந்தையின் தலையைத் தடவிக்கொடுத்தனர். பல சிறார், சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து திருத்தந்தையை முத்தமிட முயற்சித்தனர். திருத்தந்தை தனது திருத்தூதுப் பயணங்களில் சிறார் மருத்துவமனை சென்று அவர்களைப் பார்ப்பதற்கு எப்போதுமே தவறுவதில்லை. இச்சந்திப்புக்குப் பின்னர், மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்திற்குச் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், நம் உணர்வுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், அநீதிகளைக் காண்பதற்கு நம் கண்களைத் திறப்பதற்கும், துன்புறுவோர்க்கு நம் இதயங்களைத் திறப்பதற்கும் ஏற்ற காலம் தவக்காலம்;  நற்செய்தியின் உண்மையை அழிப்பதற்குத் தேடும் செல்வம், தற்பெருமை, இறுமாப்பு  ஆகிய சோதனைகளை மேற்கொள்வதற்கு ஆண்டவர் நமக்கு உதவுவாராக; இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், நம் இதயத்தைக் கிழித்தெடுக்கும் அனைத்தினின்றும் குணப்படுத்த விரும்புகிறார்; ஆகிய மூன்று திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் இஞ்ஞாயிறன்று பிரசுரிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.