2016-02-15 15:02:00

இது இரக்கத்தின் காலம் : உண்மை நட்பின் அளவுகோல்


ஒருவர் தனியே தனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியே ஓர் அடர்ந்த காடு. அதில் மிருகங்கள் அதிகம். எப்படியும் அதைக் கடந்துதான் அவர் ஊர் செல்ல வேண்டும். கதிரவன் மறைந்து விட்டான். இருளில் தனியே செல்வதற்கு அஞ்சி, ஒரு மரத்தடியில் சிறிதுநேரம் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இன்னொரு மனிதரும் தனியே வந்து கொண்டிருந்தார். நல்லவேளை ஒரு துணை கிடைத்தது என்ற மகிழ்வில் வந்தவரிடம் அவர் பேச்சுக் கொடுத்தார். அவரும் அந்தக் காட்டு வழியாகத்தான் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டார். சரி, இந்த நேரத்திலிருந்து நாம் இருவரும் நண்பர்கள். ஒருவர் ஒருவருக்குத் துணையாக இந்தக் காட்டு வழியே நம் பயணத்தைத் தொடர்வோம். வழியில் உமக்கு ஆபத்து வந்தால் நான் உதவுகிறேன், அப்படியே எனக்கு ஆபத்து வந்தால் நீர் உதவும், இருவருக்கும் ஆபத்து என்றால், ஒருவர் ஒருவருக்கு உதவிக்கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு, காட்டு வழியே பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றவுடன் அவர்களுக்கு எதிரில் ஒரு பெரிய கரடி வந்து கொண்டிருந்தது. உடனே இரண்டாவது ஆள், கொடுத்த வாக்குறுதியை மறந்து, கிடுகிடுவென்று அங்கிருந்த மரத்தின்மீது ஏறிவிட்டார். முதல் ஆளுக்கு மரம் ஏறத் தெரியாது. செய்வது அறியாது திகைத்தார். பின்னர் மரத்தடியில் அப்படியே படுத்து மூச்சை அடக்கிக் கொண்டு, செத்துப் போனவர்போல் கிடந்தார். அந்தக் கரடி அவர் பக்கத்திலே வந்து, கீழே படுத்திருந்த மனிதரை முகர்ந்து பார்த்தது. ஆள் இறந்துவிட்டார் என்று நினைத்த கரடி, தன் வழியிலே சென்றுவிட்டது. பின்னர் மரத்தில் ஏறியவர் கீழே இறங்கி வந்து, அந்த ஆளிடம், அந்தக் கரடி உன் காது ஓரமா ஏதோ சொல்லியதே, அது என்ன என்று கேட்டார். அதற்கு அவர், அதுவா, ஆபத்துக்கு உதவாத உன்னைப் போன்ற நண்பர்களை நம்பாதே என்று கிசுகிசுத்தது என்றார்.    

ஒருவர் ஒருவருக்கு உதவி வாழத் தூண்டுகிறது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.