2016-02-14 13:43:00

மெக்சிக்கோ, ஒரு கண்ணோட்டம்


பிப்.14,2016. மெக்சிக்கோ, வட அமெரிக்காவில், ஒரு கூட்டாட்சி அரசியல் அமைப்பைக் கொண்ட குடியரசு நாடாகும். இதன் வடக்கே அமெரிக்க ஐக்கிய நாடும், தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும், கரிபியன் கடலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. அமெரிக்காவில் ஐந்தாவது பெரிய நாடாகவும், உலகில் 13 வது பெரிய குடியரசு நாடாகவும் இது உள்ளது. மக்கள் தொகையில், உலகில் 11வது இடத்திலும், இலத்தீன் அமெரிக்காவில் இரண்டாவது இடத்திலும், இஸ்பானியம் பேசும் நாடுகளில் அதிகமான மக்கள் தொகையையும் கொண்டுள்ள நாடு மெக்சிகோ. மெக்சிக்கோ, உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பில் முதலிடத்திலும் உள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிகமான கத்தோலிக்கரைக் கொண்டுள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டில், 92 விழுக்காட்டினர் அதாவது 10 கோடியே 90 இலட்சம் பேர் கத்தோலிக்கர். 5 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் மற்றும் 3 விழுக்காட்டினர் எந்த மதங்களையும் சாராதவர்கள். மெக்சிக்கோ அரசின் புள்ளிவிபரங்களின்படி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் பத்து விழுக்காட்டினர் உட்பட, ஏறக்குறைய 46 விழுக்காட்டினர் ஏழ்மையில் வாழ்கின்றனர். மேலும், போதைப்பொருள் வர்த்தக கும்பல்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே இரத்தம் சிந்தும் மோதல்களும் இடம்பெற்று வருகின்றன. இதில், கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 28 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். அதிகமான இயற்கை வளங்களையும், வளமையான கலாச்சாரப் பாரம்பரியங்களையும் கொண்டுள்ள மெக்சிகோவில், ஐரோப்பியர் காலனி ஆதிக்கத்தை ஆரம்பித்த 1521ம் ஆண்டுக்கு முன்னரே, Olmec, Toltec, Teotihuacan, Zapotec, Maya, Aztec போன்ற பூர்வீக இனத்தவர் வாழ்ந்து வந்தனர். தற்போது இப்பூர்வீக மக்களின் உரிமைகளும் பெருமளவில் மீறப்படுகின்றன. அதோடு, போதைப்பொருள், மனித வர்த்தகம் மற்றும் வன்முறைகளும் நிறைந்துள்ளன. இந்நாட்டில், பிப்ரவரி 12, இவ்வெள்ளி முதல், ஐந்து நாள்கள் கொண்ட தனது 12வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நாட்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தனது 27 ஆண்டு தலைமைப் பணியில் ஐந்து முறைகளும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டிலும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.