2016-02-13 14:12:00

திருத்தந்தையும், முதுபெரும் தந்தையும் வெளியிட்ட இணை அறிக்கை


பிப்.13,2016. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! (2 கொரி. 13:13)

1. அனைத்து கொடைகளுக்கும் ஊற்றான தந்தையாம் இறைவனின் சித்தத்தால், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால், தேறுதல் தரும் தூய ஆவியாரின் உதவியால், திருத்தந்தையான பிரான்சிஸ், மற்றும், மாஸ்கோ, இரஷ்யா இவற்றின் முதுபெரும் தந்தை கிரில் ஆகிய இருவரும், ஹாவானாவில் இன்று சந்தித்தோம். வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் இச்சந்திப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.

கிறிஸ்தவ நம்பிக்கையில் வேரூன்றிய நாங்கள் இருவரும், மகிழ்வுடன், உடன் பிறந்தோர் போல் சந்தித்துள்ளோம். திரு அவைகளுக்குள் உள்ள உறவு, இறைமக்களின் பிரச்சனைகள், மனித நாகரீக முன்னேற்றம் இவற்றை மனதில் கொண்டு இங்கு சந்தித்துள்ளோம்.

2. மேற்கும், தெற்கும் சந்திக்கும் கியூபாவில் இந்த சந்திப்பு நிகழ்கிறது. புது உலகின் ஓர் அடையாளமாக விளங்கும் இந்தத் தீவிலிருந்து, நாங்கள் இலத்தீன்அமெரிக்காவிற்கும், ஏனைய கண்டங்களுக்கும் எங்கள் அறிக்கையை விடுக்கிறோம்.

3. "பழைய உலகம்" உருவாக்கிய நீண்ட கால மோதல்களிலிருந்து விலகி, கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் மேன்மையான உள்ளத்தோடும், மதிப்போடும், இணைந்து பணியாற்றும் அவசரத் தேவை உருவாகியுள்ளதை உணர்கிறோம்.

4. கிறிஸ்துவத்தின் முதல் நூற்றாண்டிலிருந்து நாங்கள் ஒரே ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பகிர்ந்து வந்துள்ளோம். இறைவனின் தாயும், கன்னியுமான மரியாவையும், புனிதர்களையும் நாங்கள் வணங்குவது, இந்த பாரம்பரியத்திற்கு சாட்சியாக விளங்குகிறது.

5. முதல் பத்து நூற்றாண்டுகள் பகிரப்பட்ட இந்த பாரம்பரியத்திலிருந்து விலகி, ஏறத்தாழ கடந்த ஆயிரம் ஆண்டுகள் கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் ஒரே திருவிருந்தில் பங்குபெற முடியாமல் போனது. பழைய, மற்றும் புதிய மோதல்கள் பிரிவுகளையும், காயங்களையும் உருவாக்கியுள்ளன. "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!" (யோவான் 17:21) என்று இறுதி இரவுணவின்போது, இயேசு வேண்டியதற்கு மாறாக, உருவாகியுள்ள இந்தப் பிரிவினால் நாங்கள் வேதனையடைகிறோம்.

6. நாங்கள் மேற்கொள்ளும் இச்சந்திப்பு, கிறிஸ்துவின் அனைத்து சீடர்களும் முழுமையாக இணைவதற்கு உந்துசக்தியாக அமையவேண்டும் என்று, அனைத்துலக கிறிஸ்தவர்களும் மன்றாடுவார்களாக. உலகெங்கும் வாழும் நல்மனம் கொண்டோர் அனைவருக்கும், இச்சந்திப்பு, நம்பிக்கை தரும் ஓர் அடையாளமாக இருப்பதாக!

7. அன்றைய உலகின் சவால்களைச் சந்தித்து, கிறிஸ்துவின் நற்செய்திக்குச் சாட்சிகளாக, முதல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நமது பராம்பரியத்தை மீண்டும் நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்வோம் என்ற உறுதி எங்களுக்கு உள்ளது. இன்றைய உலகம் நமக்கு விடுக்கும் சவால்களைச் சந்திக்க நாம் இணைந்து சாட்சியம் வழங்கவேண்டும்.

8. இன்றைய உலகில் பெரும் இன்னலுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள் மீது எங்கள் பார்வை திரும்புகிறது. மத்தியக் கிழக்கு, மற்றும் வட ஆப்ரிக்கா பகுதிகளில் உள்ள நாடுகளில் கிறிஸ்தவர்களின் குடும்பங்களும், கிராமங்களும் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. கோவில்கள் இடிக்கப்பட்டு, புனிதப் பொருள்கள் அவமதிப்புக்குள்ளாகின்றன. சிரியா, ஈராக், மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமளவு வெளியேறி வருவதை இப்போது எண்ணிப் பார்க்கிறோம்.

9. மத்தியக் கிழக்கு கிறிஸ்தவர்களின் வெளியேற்றத்தைத் தடுக்க, அனைத்துலக சமுதாயம் முன்வந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். துயருறும் கிறிஸ்தவர்களுடன் நாங்களும் உள்ளத்தால் இணைகிறோம்.

10. சிரியாவிலும், ஈராக்கிலும் வன்முறைகளுக்குப் பலியானோர், ஆயிரமாயிரம் பேர். பேச்சு வார்த்தைகளின் வழியே இந்த வன்முறைகளைத் தீர்க்க வேண்டுமென அனைத்துலக சமுதாயத்தைக் கேட்டுக்கொள்கிறோம். 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அலெப்போவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட ஆயர்கள் பால் மற்றும் ஜான் இப்ராஹிம் இருவரையும், உடனடியாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கிறோம்.

11. மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதியைக் கொணர, நல்மனம் கொண்ட அனைத்து மக்களும் உதவிசெய்ய வேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்துலக சமுதாயமும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வுலகையும், படைப்பு அனைத்தையும் காத்தருள அனைத்துலக கிறிஸ்தவர்களும் செபிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

12. கிறிஸ்தவை மறுதலிப்பதற்குப் பதில், மரணத்தைத் தேர்ந்த கிறிஸ்தவ சாட்சிகளுக்கு முன் நாங்கள் தலைவணங்கி நிற்கிறோம். பல்வேறு சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இவ்வாறு மரணமடைந்திருப்பது, கிறிஸ்தவ ஒற்றுமைக்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது. தொடர்ந்து துன்புற்று வரும் கிறிஸ்தவர்களுக்கு திருத்தூதர் பேதுருவின் வார்த்தைகளைக் கூறுகிறோம்: “அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.” (1 பேதுரு 4: 12-13)

13. பல்சமய  உரையாடல் நம் காலத்தின் மிக முக்கியத் தேவை. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அமைதியில் வாழ்வதற்கு, வேறுபாடுகள் காரணமாக அமையக்கூடாது. பல்வேறு மதங்கள் குறித்த சரியான புரிதலை மக்களுக்கு சொல்லித் தரும் பொறுப்பு, மதத் தலைவர்களைச் சார்ந்தது. மதத்தின் பெயரால், குற்றங்கள் புரிவது, முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. கடவுள் குழப்பத்தை ஏற்படுத்துபவரல்ல; அமைதியை ஏற்படுத்துபவர் (1 கொரி. 14:33) என்பதால், கடவுள் பெயரால் எந்தக் குற்றமும் நடக்கக்கூடாது.

14. மதச் சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில், இரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கிறிஸ்தவம் மீண்டும் வளர்ந்து வருவது கண்டு, இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். இறை நம்பிக்கையற்ற நிலை நீடித்து வந்த இப்பகுதிகளில், பாழடைந்திருந்த கிறிஸ்தவ ஆலயங்கள் மீண்டும் கட்டியெழுப்பப் படுதல், துறவு மடங்கள் மீண்டும் ஒப்ப்டைக்கப்படுதல், புதிய ஆலயங்கள் கட்டப்படுதல் ஆகிய செயல்பாடுகள், கடந்த 25 ஆண்டுகளாக நிகழ்வது, மகிழ்வைத் தருகின்றன. நற்செய்தியின் சாட்சிகளாக, கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைந்து உழைத்து வருகின்றனர்.

15. அதே வேளையில், இன்னும் பல நாடுகளில், தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்த, கிறிஸ்தவர்களுக்கு விதிக்கப்பட்டுவரும் தடைகளை எண்ணி கவலைப்படுகிறோம். மத சார்பற்ற சமுதாயமாக மாறிவரும் சில நாடுகளில், கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர், சமுதாயத்தின் ஓரங்களுக்கு தள்ளப்படுவதையும் கவலையோடு காண்கிறோம்.

16. பல நூற்றாண்டுகளாக இரத்தம் தோய்ந்த மோதல்களில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நம்பிக்கையைத் தந்தன. இவ்வாறு ஒன்றிணைந்து வரும்போது, மத அடையாளங்களுக்கு மதிப்பளிக்காமல் போவது குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பல்வேறு மதங்களை ஐரோப்பிய சமுதாயத்திற்குள் வரவேற்கும் அதே நேரத்தில், ஐரோப்பா, கிறிஸ்தவ மறையின் வேர்களைக் கொண்டது என்பதையும் மறக்கக்கூடாது.

17. கொடிய வறுமையில் வாடும் மக்கள் மீதும் எங்கள் பார்வை திரும்புகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகளின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்தொரைக் கண்டும், காணாமல் அக்கறையின்றி இருக்கமுடியாது. நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் வளர்ச்சியடைந்துள்ள நாடுகள், இந்தப் பூமிக் கோளத்தின் செல்வங்களைக் குறைத்துவருகின்றன. உலகச் செல்வங்கள் சமமற்ற நிலையில் பகிரப்படுவது, அநீதி என்ற உணர்வை உலகச் சமுதாயத்தில் வளர்க்கிறது.

18. நீதியை கட்டிக்காக்கவும், மக்களின் பாரம்பரியத்தை மதிக்கவும், துன்புறுவோருடன் இணையவும் கிறிஸ்தவ சபைகள் அழைக்கப்பட்டுள்ளன. கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார் (1 கோரி. 1:27-29) என்பதை, கிறிஸ்தவர்களாகிய நாம் மறக்கமுடியாது.

19. மனித சமுதாயத்தின் இயல்பான மையம், குடும்பம் என்பதை ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க விசுவாசிகள் அனைவரும் நம்புகின்றனர். குடும்பங்களில் உருவாகியுள்ள நெருக்கடிகள் கண்டு கவலைப்படுகிறோம்.

20. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உருவாகும் அன்பு, திருமணமாக வடிவெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு, குடும்பம் அமைகிறது. திருமணம், அன்பையும், பிரமாணிக்கத்தையும் சொல்லித்தரும் ஒரு பள்ளியாக விளங்குகிறது. பல்வேறு வழிகளில் கூடிவாழும் முறைகளை, திருமணத்திற்கு இணையாகக் கருதுவதைக் கண்டு நாங்கள் வருந்துகிறோம்.

21. உயிர் வாழும் உரிமையை மதிக்கவேண்டும் என்பதை நாங்கள் ஆணித்தரமாகக் கூறுகிறோம். கருக்கலைப்பு, மற்றும் கருணைக் கொலை வழியே பல இலட்சம் பேரின் வாழ்வுரிமை பறிக்கப்படுகின்றது. உயிரியல் தொழிநுட்பம் வழியே உயிர்களை உருவாக்கும் முன்னேற்றமும் கவலை தருகிறது. கிறிஸ்தவ நம்பிக்கை கூறுவதுபோல், படைக்கும் இறைவனின் திட்டத்திற்கு உகந்த வழிகளே சிறந்ததென நம்புகிறோம்.

22. இன்று, குறிப்பாக, இளைய கிறிஸ்தவர்களிடம் பேச விழைகிறோம். இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ள அனைத்துத் திறமைகளையும் புதைத்துவிடாமல் (காண்க. மத். 25:25) கடவுளுக்காகவும், அயலவருக்காகவும் பயன்படுத்துங்கள். இறைவனின் உண்மையை நிலைநாட்டுவதற்கென, எதிர்நீச்சல் போட அஞ்சாதீர்கள்.

23. உங்கள் ஒவ்வொருவரையும் இறைவன் அன்புகூர்கிறார். நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். (காண்க. மத். 5: 14,16) உங்கள் குழந்தைகளை கிறிஸ்தவ நம்பிக்கையில் வளர்த்து வாருங்கள்.

24. ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கை கொண்ட அனைவரும், கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளோம். இப்பணியில் நாம், போட்டியாளர்கள் அல்ல, மாறாக, உடன் பிறந்தோர். உலகெங்கும் வாழும் கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் அமைதியிலும், அன்பிலும் வாழ நாங்கள் விண்ணப்பிக்கிறோம்.

25. கிரேக்கக் கத்தோலிக்கருக்கும்,ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கும் இடையே நிலவிவரும் இறுக்கங்கள் தீர்ந்து, இணக்கம் உருவாக எங்கள் சந்திப்பு உதவட்டும். ஒவ்வொரு சபையும் அவரவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களைக் கண்காணிக்கும் அதே வேளையில், இரு சபையினரும் நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

26. உக்ரைன் நாட்டில் நிலவிவரும் பகைமையைக் கண்டு மிகவும் வருந்துகிறோம். இந்தப் பிரச்சனையைத் தீர்த்து, அங்கு அமைதியைக் கொணர, அனைத்துத் தரப்பினரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உக்ரைன் நாட்டில் பணியாற்றும் அனைத்து கிறிஸ்தவ சபைகளும், சமுதாய ஒருங்கிணைப்பை நோக்கி உழைக்க கேட்டுக்கொள்கிறோம்.

27. உக்ரைன் நாட்டில் வாழும் அனைத்து ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வதற்கு அழைக்கிறோம். இதற்கு, அங்கு வாழும் கத்தோலிக்கர்கள் உதவி செய்யவேண்டும்.

28. பன்முகம் கொண்ட இன்றைய சமுதாயத்தில் ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கை கொண்ட அனைவரும் இணைந்து விவிலியத்தைப் பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளோம். நாம் இணைந்து வழங்கும் சாட்சியமே, எதிர்கால மனித சமுதாயத்திற்கு அதிகம் தேவை.

29. நாம் வழங்கும் இந்தத் துணிவான சாட்சியத்திற்கு, கடவுளும் மனிதனுமான இயேசு கிறிஸ்துவே அடித்தளமாக இருப்பார். “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்” (லூக்கா 12:32) என்ற அவரது வாக்கு நமக்கு உறுதி அளிக்கட்டும்.

30. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மேற்கொள்ளப்பட்ட இச்சந்திப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறோம். இறைவனின் அன்னை, தன் பரிந்துரையால், இந்த உறவை வலுப்படுத்தி, இறை மக்கள் அனைவரும் அமைதியில் வாழும் வரத்தைப் பெற்றுத் தருவாராக.

இப்படிக்கு,

உரோமைய ஆயரும், கத்தோலிக்கத் திருஅவையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ்,

மாஸ்கோ மற்றும் அனைத்து இரஷ்யாவின் முதுபெரும் தந்தை கிரில்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.