2016-02-13 15:17:00

இரஷ்ய முதுபெரும் தந்தையைச் சந்தித்தது குறித்து திருத்தந்தை


பிப்.13,2016. ஹவானா, ஹோசே மார்ட்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் ஏறக்குறைய மூன்று மணி நேரம் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர், கியூப அரசுத்தலைவர் விமானம் வரை சென்று வழியனுப்ப, மகிழ்வும் நன்றியும் நிறைந்த நெஞ்சுடன் மெக்சிகோவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏற்கனவே உரோம் நகரிலிருந்து ஹவானாவுக்கு 12 மணி நேரத்திற்கு மேல் நீண்ட விமானப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, ஓய்வெடுக்காமல் மூன்று மணி நேர நிகழ்வை முடித்து மீண்டும் ஒரு பயணத்தைத் தொடங்கினார். 79 வயது நிரம்பிய திருத்தந்தை பயணக் களைப்பாக இருப்பார் என்று, அவரோடு பயணம் மேற்கொண்ட 76க்கு மேற்பட்ட செய்தியாளர்கள் நினைத்திருக்க, விமானம் மெக்சிகோவுக்குப் புறப்பட்ட உடனே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் முதுபெரும் தந்தை Kirill அவர்களைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நானும், முதுபெரும் தந்தை கிரில் அவர்களும், எங்களின் திருஅவைகள், உலகின் நிலைமை, போர்கள், வருகிற ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பேரவை போன்றவை பற்றிப் பேசினோம். ஆண்டவரிடமிருந்து வரும் மகிழ்வை உள்ளத்தில் உண்மையிலேயே உணர்கிறேன். திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch, ஆர்த்தடாக்ஸ் சபை பேராயர் Hilarion, இரு மொழி பெயர்ப்பாளர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் இருந்தனர். இச்சந்திப்பில் மிகவும் சுதந்திரமான சூழல் இருந்தது. ஒன்றிப்பு என்பது சேர்ந்து நடத்தலாகும். பொதுவில் சேர்ந்து செயல்படக்கூடிய நடவடிக்கைகள் பற்றிப் பேசினோம். நாங்கள் வெளியிட்ட அறிக்கை, மேய்ப்புப்பணி சார்ந்தது. சமூகவியல் சார்ந்தது இல்லை. இரு ஆயர்கள், மேய்ப்புப்பணி குறித்த அக்கறைகள் பற்றிப் பேசியதாக இச்சந்திப்பு அமைந்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஹவானாவிலிருந்து மெக்சிகோ சென்ற விமானப் பயணத்தில், குறைந்த நேரத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கியூப அரசுத்தலைவர் காட்டிய தாராளம் நிறைந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து தந்திச் செய்தி ஒன்றையும் அனுப்பினார் திருத்தந்தை. இறைஇரக்கம் மற்றும் அமைதியின் தூதுவராக மெக்சிகோவுக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தில் கியூப மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார். இது முக்கியமான சந்திப்பு. அமைதி, ஒப்புரவு மற்றும் நன்மனம் கொண்ட அனைவரின் நல்லிணக்க வாழ்வை எட்ட நாம் விரும்பினால், உரையாடல், சந்திப்பு மற்றும் புரிந்துகொள்ளும் பாதையில் செல்வதை நாம் நிறுத்த முடியாது. கியூப மக்களுக்கு எனது செபமும் ஆசிரும். எனக்காகச் செபியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.