2016-02-13 16:21:00

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை


பிப்.13,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 12, இவ்வெள்ளிக்கிழமை மாலையில் கியூபத் தலைநகர் ஹவானா விமான நிலையத்தில் சந்தித்த இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், ஏறக்குறைய 16 கோடியே 50 இலட்சம் உறுப்பினர்களுக்குத் தலைவராவார். 1054ம் ஆண்டில் கிழக்கில் கிரேக்க மொழி பேசுவோர்க்கும், மேற்கில் இலத்தீன் மொழி பேசுவோர்க்கும் இடையே ஏற்பட்ட திருஅவை மற்றும் இறையியல் சார்ந்த கருத்தியல் முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்ட பிரிவினையை, கிழக்கு-மேற்குப் பிரிவு என்று சொல்லப்படுகின்றது. இது பொதுவாக, 1054ம் ஆண்டின் மாபெரும் பிரிவு என்று அழைக்கப்படுகிறது. தூய ஆவியார், திருநற்கருணையில் புளித்த அப்பத்தை அல்லது புளியாத அப்பத்தைப் பயன்படுத்தல், திருத்தந்தையின் உலகளாவிய அதிகாரம், உரோமைப் பேரரசின் ஐந்து பெரும் திருஅவைத் தலைமைப் பீடங்களில் Constantinople திருஅவைத் தலைமையின் இடம் போன்ற விவகாரங்கள் இந்தப் பெரும் பிரிவுக்குக் காரணமாகும். 11ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிளவு தொடர்ந்தது. இதன் ஆரம்பமாக, 1053ம் ஆண்டில், Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை Michael Cerularius அவர்கள், தனது ஆட்சிப் பீடத்திலிருந்த அனைத்து இலத்தீன் ஆலயங்களையும் மூடும்படி ஆணையிட்டார். அதற்குப் பதிலடியாக, தென் இத்தாலியிலிருந்த கிரேக்க ஆலயங்கள் மூடப்பட வேண்டும் அல்லது இலத்தீன் ஆலயங்களோடு இணைய வேண்டும் என்று அப்போதைய திருத்தந்தை 9ம் லியோ ஆணையிட்டார். உரோம் கத்தோலிக்கத் திருஅவையும், Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவையும், இவ்விரு திருஅவையின் உறுப்பினர்களைப் புறம்பாக்குவதாக அறிவித்தன. அதைத் தொடர்ந்து பல பிரச்சனைகள். பின்னர் எடுக்கப்பட்ட பல ஒப்புரவு முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. 1274 மற்றும் 1439ம் ஆண்டுகளில் லியோன் மற்றும் ப்ளாரன்ஸ் நகரங்களில் நடைபெற்ற பொதுச் சங்கங்களில் இவ்விரு திருஅவைகளையும் இணைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் தோல்வியே. இறுதியில், 1965ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்புத் முதுபெரும் தந்தை முதலாம் Athenagoras அவர்களும் சந்தித்து, 1054ம் ஆண்டின் புறம்பாக்கலை செல்லாத்தாக்கினர். 25 கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த Constantinople ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர், உலகளாவிய ஆர்த்தடாக்ஸ் பற்றிப் பேச வல்லமை கொண்டவராக உள்ளார். Constantinople ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், உரோம் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே முழு ஒன்றிப்பு ஏற்படவில்லை எனினும், தற்போது இவ்விரு திருஅவைகளுக்கிடையே நல்லுறவுகள் நிலவுகின்றன.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஐந்து முக்கிய கீழை ஆர்த்தடாக்ஸ் சபைகளில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை, செல்வமிக்கது. இது உரோம் திருஅவையிடமிருந்து எப்போதுமே விலகி இருப்பது. முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடுகளில் கத்தோலிக்கத் திருஅவை மனம் மாற்றத்தில் ஈடுபடுகின்றது என்று இது குறை கூறுகின்றது. உக்ரேய்னின் மேற்கு பகுதி தனது நிலப்பகுதி என்றும், அதில் திருத்தந்தையின் செல்வாக்கு இருக்கக் கூடாது என்றும் கூறி வருகிறது. இந்தப் பதட்ட நிலைகளே, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான முதுபெரும் தந்தை, முந்தைய திருத்தந்தையரைச் சந்திப்பதற்குத் தடைகளாக இருந்தன. தற்போதும் இப்பதட்டநிலைகள் இல்லாமல் இல்லை. ஆயினும், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைவதற்கு கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பு முக்கியம் என்று உணரப்பட்டு கியூபாவில் பிப்ரவரி 12ம் தேதி மாலை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.