2016-02-13 14:33:00

இது இரக்கத்தின் காலம் – அங்காடிப் பொருளாக மாறிவிட்ட அன்பு


உரோமையப் பேரரசில் பிப்ரவரி 14ம் தேதி, உரோமைய தேவர், தேவதைகளின் அரசியான ஜூனோவின் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்தத் திருநாளைத் தொடரும் நாட்களில், இளம்பெண்களின் பெயர்களைச் சீட்டுக் குலுக்கிப்போட்டு, இளைஞர்கள் தெரிவு செய்வர். தெரிவு செய்யப்பட்ட இளம்பெண்ணும், இளைஞனும், நண்பர்கள் என்று அறிவிக்கப்படுவர். இப்படி ஆரம்பமாகும் நட்பு, பின்னர் காதலாகி, திருமண வாழ்வில் முடிவடையும்.

மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் Claudius மன்னனாய் இருந்தபோது, போரிடுவதற்கு ஆட்கள் சேர்ப்பது பெரும் கடினமாய் இருந்தது. இளைஞர்கள் தங்கள் காதலைத் துறந்து, இராணுவத்தில் சேர விரும்பவில்லை. எனவே, மன்னன் Claudius, பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்பட்டத் திருநாளையும், அதைத் தொடரும் காதல், திருமணம் இவற்றையும் தன் பேரரசில் முற்றிலும் தடை செய்தான். அந்நேரத்தில் உரோம் நகரில் பணியாற்றி வந்த வாலன்டைன் (Valentine) என்ற கத்தோலிக்க அருள்பணியாளர், அரசனுக்குத் தெரியாமல், பல இளையோருக்கு திருமணங்கள் நடத்திவைத்தார். இதை அறிந்த அரசன், அந்த அருள்பணியாளரைக் கைதுசெய்து, சிறையிலடைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினான். அருள்பணி வாலன்டைன் அவர்கள், சிறையில் சித்திரவதைகள் அனுபவித்தபோது, சிறைக் காவலரின் பார்வையற்ற மகளைக் குணமாக்கினார் என்ற கதை ஒன்று உண்டு. 270ஆம் ஆண்டளவில், பிப்ரவரி 14ம் தேதி, அருள்பணி வாலன்டைன் அவர்கள், தலை வெட்டப்பட்டு, உயிர் துறந்தார்.  

வெறியை வளர்க்கும் மன்னனின் அதிகாரத்தை எதிர்த்து, அன்பையும் காதலையும் வளர்க்க அருள்பணி வாலன்டைன் அவர்கள் செய்தது அழகான ஒரு முயற்சி. அந்த முயற்சியையும் அவர் பகிரங்கமாய் செய்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால், அவரது 'அன்புப் படை'யில் ஆயிரக்கணக்கான இளையோரைச் சேர்த்து போராடியிருக்கலாம். (‘அன்புப் படை’ என்பதே, ஒன்றோடொன்று பொருத்தாத சொற்றொடர்). போராட்டம், கலவரம் என்று வாலன்டைன் மன்னனை எதிர்த்திருந்தால், அந்த கலவரங்களில் பல உயிர்கள் பலியாகியிருக்கும். அன்பின் பெயரால் இந்தக் கொலைகளைச் செய்ய விரும்பாத அந்த அருள்பணியாளர் அமைதியாக, அரசனுக்குத் தெரியாமல் அன்பை வளர்த்துவந்தார். அற்புதங்கள் நடத்திவந்தார்.

உண்மை அன்பை வளர்க்க, அருள்பணி வாலன்டைன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஓரந்தள்ளிவிட்டு, அவரது இறந்த நாளான பிப்ரவரி 14ம் தேதியை, ‘வாலன்டைன் நாள்’ அல்லது ‘காதலர் தினம்’ என்று பெயர் சூட்டி, அன்பை, அங்காடிப் பொருளாக மாற்றிவிட்டனர் வியாபாரிகள். வர்த்தக உலகத்தின் விளையாட்டிற்கு நம் இளையோர் பலியாகி வருவது, கசப்பான உண்மை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.