2016-02-12 16:32:00

புனித பூமித் தலத்திருஅவைக்கு உதவுமாறு ஆயர்களுக்கு கடிதம்


பிப்.12,2016. புனித பூமித் தலத்திருஅவைக்கு உதவுமாறு உலகின் அனைத்து ஆயர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி.

புனித வெள்ளியன்று புனித பூமிக்காகத் திரட்டப்படும் நிதி, உதவிகள் அதிகம் தேவைப்படும், புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், வயதானவர்கள், சிறார் மற்றும் நோயாளர்க்கு வழங்கப்படும் என்று, கர்தினால் சாந்திரி அவர்களின் கடிதம் கூறுகின்றது.  

மேலும், உள்ளூர் திருத்தலங்களைப் பராமரிக்கவும், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் புலம்பெயர்ந்த மக்களுக்கு, மேய்ப்புப்பணி, கல்வி, நலவாழ்வுப்பணி மற்றும் சமூகநலப் பணிகளைப் பங்குத்தளங்கள் ஆற்றவும் இந்நிதி உதவும் என்றும் அக்கடிதம் கூறுகின்றது.

புனித பூமியில் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர், கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர், கட்டாயப் புலம்பெயர்வு காரணமாக, பிரிந்துள்ள குடும்பங்கள், தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்காகத் துன்பம் அனுபவிக்கின்றனர் என்றும், தனிமை, புரிந்துகொள்ளப்படாமை மற்றும் புறக்கணிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் பிடியில் அம்மக்கள் உள்ளனர் என்றும் கர்தினால் சாந்திரி அவர்கள் கூறியுள்ளார்.

புனித வெள்ளியன்று புனித பூமிக்காக ஆலயங்களில் திரட்டப்படும் நிதி, எருசலேம், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டன், சைப்ரஸ், சிரியா, லெபனான், எகிப்து, எத்தியோப்பியா, எரித்ரியா, துருக்கி, ஈரான், ஈராக் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.