2016-02-12 16:13:00

திருத்தந்தை-மெக்சிகோ திருத்தூதுப்பயணம் மிகவும் முக்கியமானது


பிப்.12,2016. சகோதரர் கிரில் அவர்களையும், மெக்சிகோ மக்களையும் சந்திக்க தான் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், தனக்கு மிகவும் முக்கியமானதொரு பயணம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னுடன் விமானத்தில் பயணித்த செய்தியாளர்களிடம் கூறினார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

மேலும், கடந்த 37 ஆண்டுகளாக, திருத்தந்தையரின் திருத்தூதுப் பயணங்களில் , உதவிசெய்து வந்த முனைவர் ஆல்பெர்த்தோ கஸ்பாரி (Alberto Gasbarri) அவர்கள்,  இப்பயணத்திற்குப் பின்னர் தனது இந்தப் பணியை நிறைவு செய்வார் எனவும், கடந்த 47 ஆண்டுகளாக கஸ்பாரி அவர்கள் வத்திக்கானுக்கு ஆற்றிவந்த சேவைக்கு, சிறப்பான நன்றியைத் தான் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் அறிவித்தார்.

மெக்சிகோ நாட்டிலிருந்து திரும்பிவரும் வழியில், முனைவர் கஸ்பாரி அவர்களுக்கு உரிய முறையில் நன்றி கூறப்படும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார் என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அனுப்பிய தொலைபேசிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையரின் திருத்தூதுப் பயணங்களின் ஒருங்கிணைப்பாளராக, பேரருள்திரு Mauricio Rueda அவர்கள் செயல்படுவார் என்றும், தன்னோடு விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஏறக்குறைய 76 நாடுகளின் செய்தியாளர்களிடம் அறிவித்தார் திருத்தந்தை என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

மேலும், கொலம்பிய நாட்டுச் செய்தியாளர் Nestor Ponguta அவர்கள் திருத்தந்தையின் கொலம்பியத் திருத்தூதுப் பயணம் பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பிய அரசுக்கும், FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே ஹவானாவில் நடைபெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நன்முறையில் நிறைவடைந்து அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், 2017ம் ஆண்டில் அந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது பற்றிச் சிந்திக்கலாம் என்றும் கூறினார்

மெக்சிகோ நாட்டு வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் Valentina Alazraki அவர்கள், கைவேலைப்பாடுகளாலான குவாதலூப்பே அன்னை மரியா திருவுருவம் கொண்ட துணியையும், மெக்சிகோ நாட்டுத் தொப்பி ஒன்றையும் இப்பயணத்தின் நினைவாகத் திருத்தந்தைக்கு விமானத்தில் வழங்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.