2016-02-12 16:47:00

உலகிற்கு அறிவியலும், அறிவியலுக்குப் பெண்களும் தேவை


பிப்.12,2016. எக்காலத்தையும்விட, இக்காலத்தில், உலகிற்கு அறிவியலும், அறிவியலுக்குப் பெண்களும் தேவைப்படுகின்றனர் என்று, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ கூறியுள்ளது.

பிப்ரவரி, 11, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகள் உலக தினத்தன்று இவ்வாறு கூறிய யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், அறிவியலிலும், அறிவியல் வழியாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் திறமைகள் பயன்படுத்தப்படாமல், 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.

உலகில் ஆய்வாளர்களில் பெண்கள் 28 விழுக்காடு மட்டுமே என்றும், உயர்மட்ட அளவில் பொறுப்புகள் வகிப்பது, நிதி உதவி பெறுவது போன்றவைகளுக்குப் பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அறிவியல் சார்ந்தவற்றை வெளியிடுவதிலும் பெண்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.

14 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, அறிவியல் சார்ந்த துறைகளில், இளநிலைப் பட்டயம், முதுகலைப் பட்டயம், முனைவர் பட்டம் ஆகியவற்றை, 18, 8 மற்றும் 2 விழுக்காடு என்ற அடிப்படையில் பெண்கள் பெறுகின்றனர் எனத் தெரிகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.