2016-02-11 15:38:00

மெக்சிகோ பயணம் அமெரிக்கக் கண்டம் முழுமைக்கும் பயன் தரும்


பிப்.11,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், குடிபெயர்ந்தோர் குறித்து அவர் சொல்லும் கருத்துக்கள், அமெரிக்கக் கண்டம் முழுமைக்கும், திருஅவைக்கும் பயனுள்ளதாக அமையும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.

திருத்தந்தையின் மெக்சிகோ திருத்தூதுப் பயணம் குறித்து, Zenit கத்தோலிக்கச் செய்திக்கு அளித்தப் பேட்டியில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஜோசப் கர்ட்ஸ் (Joseph Kurtz) அவர்கள் இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.

குடிபெயர்தல் என்ற பிரச்சனையை, கிறிஸ்தவப் பிறரன்பு என்ற பின்னணியில் சிந்திக்க திருத்தந்தை அவர்கள் விடுத்து வரும் அழைப்பு, நம்பிக்கையைத் தருகிறது என்று பேராயர் கர்ட்ஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

பிப்ரவரி 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோவின் Ciudad Juárez எனுமிடத்தில் நிறைவேற்றும் திருப்பலியை, அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லையில் அமைந்துள்ள டெக்சாஸ் மாநிலத்தில், El Paso மறைமாவட்டத்தின் மக்கள் காணும் வாய்ப்பு பெறுவர் என்று பேராயர் கர்ட்ஸ் அவர்கள் கூறினார்.

El Paso நகரின் ஒரு விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையின் வழியாக, திருத்தந்தை ஆற்றும் திருப்பலியை மக்கள் காணும் வேளையில், திருத்தந்தை அவர்களும், அம்மக்களுடன் தொலைக் காட்சி வழியே தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளதென்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

மெக்சிகோ மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க ஐக்கியநாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள இஸ்பானிய கத்தோலிக்கர்களின் நேர்மறையான தாக்கம், தலத்திருவையில் உணரப்படுகிறது என்று பேராயர் கர்ட்ஸ் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.