2016-02-11 15:54:00

நோயுற்றவரை நெருங்கி வர, உலக நோயாளிகள் நாள் உதவுகிறது


பிப்.11,2016. நோயுற்றவரையும், அவர்களுக்குப் பணியாற்றுபவர்களையும் நெருங்கி வருவதற்கு, உலக நோயாளிகள் நாள் உதவுகிறது என்று சுவிட்சர்லாந்து ஆயர்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

பிப்ரவரி 11ம் தேதி, கொண்டாடப்படும் புனித லூர்து அன்னை திருநாளன்று, உலக நோயாளர் நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, இச்செய்தியை வெளியிட்டுள்ள சுவிட்சர்லாந்து ஆயர்கள், நோயாளர் நாள், தங்கள் தலத்திருஅவையில் மார்ச் 6ம் தேதி கொண்டாடப்படும் என்பதையும் அறிவித்துள்ளனர்.

கானா திருமணத்தில் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று அன்னை மரியா கூறிய சொற்களை உலக நோயாளர் நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள செய்தியில், கூறியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டும் சுவிட்சர்லாந்து ஆயர்கள், பாசத்தைப் பொழியும் அன்னை மரியா, அன்னையாம் திருஅவையின் நல்ல அடையாளம் என்று கூறியுள்ளனர்.

தாய்போல பேணுவது, குறிப்பாக, நோயுற்றோரையும், சமுதாயத்தில் நலிந்தோரையும் பேணுவது திருஅவையின் தலையாயக் கடமை என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தி இருப்பதையும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது கொண்டாடப்படும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், நோயுற்றோருக்கு நாம் வழங்கும் பராமரிப்பு, கிறிஸ்தவ வாழ்வின் தலைசிறந்த சாட்சியாக விளங்கும் என்று சுவிட்சர்லாந்து ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.