2016-02-11 15:18:00

திருத்தந்தை - பிரேசில் நாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தி


பிப்.11,2016. நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்க, அரசு, சமுதாயம் என்ற அனைவருக்குமே பொறுப்பு உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டிற்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின்போது, 'சகோதரத்துவ முயற்சி' என்ற பெயரில், பிரேசில் ஆயர் பேரவையின் ஒரு செயல்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'பொதுவான இல்லம், நமது பொறுப்பு' என்ற தலைப்பில், துப்புரவு முயற்சிகளை மையப்படுத்தி, இவ்வாண்டு மேற்கொள்ளப்படும் தவக்கால முயற்சிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் ஒரு செய்தி வடிவில் அனுப்பியுள்ளார்.

சுத்தமானக் குடிநீர், சுத்தமானச் சூழல் ஆகியவை, நீதியை நிலைநிறுத்தி, வறுமையைக் களைவதற்குத் தேவையான கருவிகள் என்பதை, திருத்தந்தை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற எண்ணம், நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறவேண்டும் என்று கூறும் திருத்தந்தை, இந்த முயற்சியில், அரைகுறை மனதோடு ஈடுபடுவது, ஆபத்தைக் கொணரும் என்று கூறியுள்ளார்.

பிரேசில் தலத்திரு அவையுடன், ஜெர்மனி நாட்டின் 'Misereor' என்ற கத்தோலிக்க அமைப்பும் இணைந்து செயலாற்றுவதைப் பாராட்டியுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த முயற்சி, கத்தோலிக்கத் திருஅவை என்ற வட்டத்தைக் கடந்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற பரந்த தளத்தில் செயல்படுவதற்கும், தன் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.