2016-02-11 15:42:00

இறந்த கால அரக்கர்களை இலங்கை வெல்லவேண்டும் - ஐ.நா. அதிகாரி


பிப்.11,2016. இலங்கை, தன் இறந்த கால அரக்கர்களை நேருக்கு நேர் சந்தித்து, வெல்லவேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உயர் அதிகாரி, Zeid Ra'ad Al Hussein அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 6, கடந்த சனிக்கிழமை முதல், 9, இச்செவ்வாய் முடிய இலங்கையில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்ட  Al Hussein அவர்கள், மனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்தில், கடந்த ஆண்டு சனவரி மாதம் இருந்த நிலையைக் காட்டிலும் தற்போது முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், இலங்கையின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில், இராணுவத்தின் அத்து மீறல்கள் தொடர்வது குறித்து Al Hussein அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.

அண்மையில் நடந்த சுதந்திரதின கொண்டாட்டத்தில் தமிழிலும் நாட்டுப் பண் பாடப்பட்டதையும், அரசுத் தலைவர், சிறிசேன அவர்கள், தன்னைக் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு தமிழ் போராளியை மன்னித்ததையும் ஐ.நா. உயர் அதிகாரி சிறப்பாகக் குறிப்பிட்டார்.

உலகம், இலங்கை நாட்டிற்கு வெற்றிகரமான எதிர்காலத்தை விரும்புகிறது என்று கூறிய Al Hussein அவர்கள், நடுநிலையோடு இயங்கும் நீதித்துறை ஒரு நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்லும் என்று நினைவுறுத்தினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.