2016-02-11 15:10:00

இரக்கத்தின் மறைப்பணியாளர்களை அனுப்பியத் திருத்தந்தை


பிப்.11,2016. பொய்மை, உலகம் சார்ந்த எண்ணங்கள், அக்கறையின்மை என்ற களைகளைக் களைவதற்கு, தவக்காலம் ஒரு சிறந்த தருணம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநீற்றுப் புதனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

பிப்ரவரி 10, இப்புதனன்று மாலை 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 700க்கும் மேற்பட்ட இரக்கத்தின் மறைப்பணியாளர்களுடன் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனோடும், பிறரோடும் ஒப்புரவாக தவக்காலம் விடுக்கும் அழைப்பைக் குறித்து மறையுரையாற்றினார்.

நம்மிடம் ஒரு குறையும் இல்லை என்றும், மற்றவர்களைப் போலத்தான் நாமும் தவறு செய்கிறோம் என்றும், நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்வதால், மனக் கதவுகளை மூடிவிடுகிறோம் என்று  கூறியத் திருத்தந்தை, இந்தத் தவக்காலத்தில், இந்த நிலையிலிருந்து வெளியேற அழைக்கப்படுகிறோம் என்று சுட்டிக்காட்டினார்.

'கடவுளோடு ஒப்புரவாகுங்கள்' என்று திருத்தூதர் பவுல் விடுக்கும் அழைப்பு, தவக்காலத்தில் நம் அனைவரையும் வந்து சேரும் முதல் அழைப்பு என்று கூறியத் திருத்தந்தை, 'உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்' என்று இறைவாக்கினர் யோவேல் வழியே இறைவன் விடுக்கும் நேரடி அழைப்பும் தவக்காலத்தில் நம்மை வந்தடைகிறது என்று கூறினார்.

மனம் திரும்புதல் என்ற முயற்சிக்கு உறுதுணையாக, செபம், பிறரன்புப் பணிகள், நோன்பு ஆகிய மூன்று வழிகளை நற்செய்தி சுட்டிக் காட்டுவதை, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே, குறிப்பிட்ட சில பாவங்களை மன்னிக்கும் சிறப்பான அதிகாரங்கள் வழங்கி, இரக்கத்தின் மறைப்பணியாளர்களை, திருத்தந்தை அனுப்பி வைத்தது, திருநீற்றுப் புதன் திருப்பலியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது.

தங்கள் பாவங்கள் குறித்து வெட்கத்தில் மனக் கதவுகளை மூடி வைத்திருப்பவர்களை, இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் சந்தித்து, மூடியிருக்கும் கதவுகளைத் திறக்க அவர்களுக்கு உதவவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

வெட்க உணர்வால் வெளிச்சத்தை விட்டு விலகி வாழும் மனிதர்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொணர்ந்து, தந்தையாம் இறைவனின் மன்னிக்கும், குணமளிக்கும் கரங்கள் அவர்கள் மீது பதிவதை உணர்வதற்கு, அருள் பணியாளர்கள் உதவவேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.