2016-02-10 15:49:00

மெக்சிகோ திருத்தூதுப்பயணம் குறித்து கர்தினால் பரோலின் பேட்டி


பிப்.10,2016. மெக்சிகோ நாடு, மூடப்பட்ட, அக்கறையற்ற மனநிலையைக் கடந்து, திறந்த மனதுடன் மக்களின் உண்மையானத் தேவைகளைப் புரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

பிப்ரவரி,12, இவ்வெள்ளி முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் மெக்சிகோ திருத்தூதுப் பயணத்தில் அவருடன் செல்லவிருக்கும் கர்தினால் பரோலின் அவர்கள், "Famiglia Cristiana" என்ற வார இதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மெக்சிகோ நாட்டில் திருப்பீடத் தூதராக 1989ம் ஆண்டு முதல், 1992ம் ஆண்டு முடிய பணியாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், தன் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், இந்தத் திருதூதுப் பயணம் மெக்சிகோ நாட்டிற்கு எவ்வகையில் பயனளிக்கும் என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வறுமை மற்றும் சிதைந்துபோகும் குடும்பங்கள் என்ற பிரச்சனைகள், மெக்சிகோ நாட்டில் குடிபெயர்வோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்று கூறும் கர்தினால் பரோலின் அவர்கள், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க செயலாற்றி வரும் தலத்திருஅவையை பாராட்டினார்.

போதைப்பொருள் வர்த்தகம், நீதிக்காக கொல்லப்படும் சாட்சிகள், மக்களின் மரியன்னை பக்தி, குடிபெயர்வோர் பிரச்சனைகள் ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோவில் வாழும் தன் ஆடுகளின் மணத்தை உணர்வதற்காக அந்நாட்டிற்கு வரும் நல்ல மேய்ப்பர் என்று, மெக்சிகோ உயர் மறைமாவட்டப் பேராயர், கர்தினால் நோர்பெர்த்தோ ரிவேரா கரேரா (Norberto Rivera Carrera) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.