2016-02-10 15:18:00

'இரக்கத்தின் மறைப்பணியாளர்களுக்கு' திருத்தந்தையின் உரை


பிப்.10,2016. ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளர், இந்த அருளடையாளத்தை அணுகிவரும் மனிதர்களின் இதயங்களை, கடவுளின் இரக்கம் என்ற ஆடையால் உடுத்தி, அவர்கள் உணரும் வெட்க உணர்வை நீக்கி, மகிழ்வில் அவர்களை நிரப்பவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள்பணியாளர்களுக்கு வழங்கிய ஓர் உரையில் குறிப்பிட்டார்.

பிப்ரவரி 10, திருநீற்று புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் அனுப்பவிருக்கும் 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களை' இச்செவ்வாய் மாலை வத்திக்கானில் சந்தித்து, அவர்களிடம் மனம் திறந்து பேசியபோது, இவ்வாறு கூறினார்.

உலகெங்கிலிருமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1142 'இரக்கத்தின் மறைப்பணியாளர்களில்' வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள 726 அருள்பணியாளர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தபோது, தன்னை அணுகிவரும் எவரையும் வரவேற்கக் காத்திருக்கும் அன்னையாக விளங்கும் திருஅவையின் பிரதிநிதிகளாக, இந்த அருள் பணியாளர்கள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒப்புரவு அருளடையாளத்தை நாடிவருபவர், அன்னையாக விளங்கும் திருஅவையின் அருகாமையை உணர முடியாமல் போனால், அது அவரது நம்பிக்கையையும் குலைத்துவிடும் ஆபத்து உள்ளதென்று, கூடியிருந்த அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை கூறினார்.

ஒப்புரவு அருளடையாளத்தை அணுகிவருபவரை வரவேற்பது, அவருக்கு செவிமடுப்பது, அவரை மன்னிப்பது, அவர் தேடும் அமைதியை அளிப்பது என்று அனைத்தையும் செய்வது, கிறிஸ்துவே என்றும், அந்த அருளடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர்கள், கிறிஸ்துவின் மன்னிப்பை முதலில் பெறவேண்டிய நிலையில் உள்ளவர்கள் என்றும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

1953ம் ஆண்டு, செப்டம்பர் 21ம் தேதி தான் மேற்கொண்ட ஒப்புரவு அருளடையாளம் தன் வாழ்வை மாற்றியது என்று நினைவுகூர்ந்த திருத்தந்தை, அந்த அருளடையாளத்தின்போது தன்னை அந்த அருள் பணியாளர் வரவேற்று, ஒரு தந்தைக்குரிய பாசத்தை வெளிப்படுத்திய பாங்கு தன் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.

ஒரு சில வேளைகளில் ஒப்புரவு அருளடையாளம் பெற வருவோர், தங்கள் உள்ளத்தில் இருப்பனவற்றை வார்த்தைகளால் கூற இயலாமல் தடுமாறும்போது, அவர்கள் நிலையை கனிவுடன் புரிந்துகொண்டு, மன்னிப்பை நாடி அவர்கள் வந்துள்ளனர் என்பதையும், தங்கள் வாழ்வை மாற்றி அமைக்க விரும்புகின்றனர் என்பதையும் நாம் உணர்ந்து, அவர்களை வழிநடத்தவேண்டும் என்று திருத்தந்தை 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களை' கேட்டுக் கொண்டார்.

ஒப்புரவு அருளடையாளத்தை அணுகி வருபவர் உணரும் வெட்க உணர்வைக் குறித்து, தன் உரையின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வேளையில், அருள்பணியாளர்கள் அங்கிருக்கும் மனிதருக்கு மரியாதையும், ஊக்கமும் வழங்கவேண்டியது அவரது கடமை என்று வலியுறுத்திப் பேசினார்.

தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த ஆதாம், ஏவாள் இருவருமே, வெட்கப்பட்டனர் என்றும், அவர்கள் இறைவனைக் காண விருப்பமின்றி விலகிச் சென்றனர் (தொடக்க நூல் 3:8-10) என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, பாவத்தில் விழும் மனிதர்களின் முதல் உணர்வுகள், இறைவனை விட்டு விலகிச் செல்வது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நேர்மையானவர் என்றும் குற்றமற்றவர் என்றும் கூறப்படும் நோவா, மது மயக்கத்தில் நிலை இழந்து போவதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, ஆடையின்றி கிடந்த நோவாவின் மீது துணியைப் போர்த்திய அவரது இரு மகன்கள், அவருக்குரிய மதிப்பை மீண்டும் அளித்தனர் (தொ.நூல் 9:18-23) என்பதையும் .சுட்டிக்காட்டினார்.

ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளர்கள், ஒரு நீதிபதியைப் போல் அங்கு அமர்ந்திருப்பதற்குப் பதில், நோவாவின் இரு மகன்களைப் போல், தங்களை நாடிவரும் மனிதர்களின் மாண்பை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

'இரக்கத்தின் மறைப் பணியாளர்களாக' உலகெங்கும் செல்லும் அருள்பணியாளர்களுடன் தானும் துணைவருவதாகக் கூறியத் திருத்தந்தை, அவர்கள்  மேற்கொள்ளும் பணியில், புனித லியோபோல்தோ, புனித பியோ, இன்னும் பல புனிதமான அருள் பணியாளர்களும் துணைவருகின்றனர் என்ற வார்த்தைகளுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.